ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. சட்டப்படி எப்படி சாத்தியம்? தமிழக அரசுக்கு ஆளுநர் ரவியின் “8 கேள்விகள்”
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அரசு சட்டம் இயற்ற முகாந்திரம் உள்ளதா என்பன உள்ளிட்ட 8 கேள்விகளை ஆளுநர் எழுப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலரது தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய அதிமுக அரசு விதித்த தடையை எதிர்த்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடையை ரத்து செய்ததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி செயல்பாட்டுக்கு வந்தது.
இதனை தடுக்க தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்தை கொண்டு வர முயன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

காலம் தாழ்த்திய ஆளுநர்
அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றியது. இதனை தொடர்ந்து அந்த சட்ட மசோதா ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் அதற் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார்.

உயரும் பலி எண்ணிக்கை
அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான 6 மாத காலம் நிறைவடைந்ததால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியுடன் இந்த சட்டம் காலாவதியானது. இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் அவசர சட்டம் நிறைவேற்றிய பிறகு இறந்தவர்கள் மட்டும் 18 பேர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

142 நாள்
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டு நேற்றுடன் 142 நாட்கள் கடந்தது. இதற்கு முன்னதாகவே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவிக்காத ஆளுநரை தமிழ்நாடு அரசும் திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மசோதா தொடர்பாக ரவி சில கேள்விகளை அரசிடம் எழுப்பி இருந்தார்.

அன்று எழுப்பிய கேள்விகள்
அதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? தடை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை மாநில அரசால் நிர்ணயிக்க முடியுமா என்பன உள்ளிட்ட கேள்விகளை ஆளுநர் அப்போது எழுப்பியதாக கூறப்பட்டது. இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளித்த கடிதம் ஒன்றையும் அனுப்பியது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்த நிலையில் 2 வது முறையாக தமிழ்நாடு அரசுக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். அதில் திருத்தங்கள் செய்து அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் ரவி அரசிடம் கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சட்டப்படி சாத்தியமா?
அதில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு முகாந்திரம் இல்லை என்று அவர் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மசோதா சட்டப்படி எப்படி சாத்தியமாகும்? என்றும் இந்த விவகாரம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் வருவதாகவும் ஆளுநர் அதில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications