இடைவிடாத மழை வெள்ள பாதிப்பு ஆய்வு-முதல்வர் மு.க.ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டிய ஆளுநர் ஆர்.என். ரவி?
சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை ஒவ்வொரு நாளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைவிடாமல் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு நடத்தி வருவது குறித்து மனம் திறந்து பாராட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்கின்றன ராஜ்பவன் வட்டாரங்கள்.
தமிழகத்துக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் வெளியேவர வேண்டாம்; வீட்டிலேயே இருங்கள் என்கிற ரீதியில் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனாலும் ஆளுநர் தமிழக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுகிறாரோ? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
பொதுவாக தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட முதல் அவருக்கும் தமிழக அரசுக்கும் ஏதேனும் முட்டல் மோதல் என செய்திகள் வராதா? என அரசியல் கட்சிகள் பலவும் காத்து கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் கட்சிகள் இருப்புக்காகவும் திமுகவை வசைபாடவும் என பல ஆதாயங்களை கணக்குப் போட்டு இப்படி காத்திருக்கின்றன.

இணக்கமான போக்கு?
ஆனால் திமுக அரசு தரப்பும் ஆளுநர் தரப்பும் சரி அப்படியான முட்டல் மோதல்களை பகிரங்கப்படுத்திக் கொள்ளவில்லை. பொதுவாக ஒருவித இணக்கமான போக்கையே ஆளும் திமுக அரசும் ஆளுநர் தரப்பும் கடைபிடித்து வருவதாகவே கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நிலவரங்களை கோட்டையிலிருந்து விரிவாக பெற்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்கின்றன தலைமை செயலக தகவல்கள்

ஆச்சரியப்பட்டாராமே?
அதாவது ஒவ்வொரு மாவட்டத்தின் பாதிப்புகள், அதனை சரி செய்ய அரசு நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகள் என அத்தனையையும் மிக மிக உன்னிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கவனித்து வருகிறார் என்கின்றன ராஜ்பவன் தகவல்கள். அதே தரப்புதான் இன்னொரு தகவலையும் வெளிப்படுத்தி இருக்கிறது. அதாவது மக்களை பாதுகாக்கவும், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கையை கண்டு வியந்து போயிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என கூறுகின்றன அந்த வட்டாரங்கள்.
Recommended Video

முதல்வர்கள் நிலை
மேலும் ராஜ்பவன் உயர் அதிகாரிகளிடம் பேசுகையில், எனது பணி காலத்தில் எத்தனையோ முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். பேரிடர் காலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போல களத்தில் இறங்கி பணியாற்றியவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை. பொதுவாக இதுபோன்ற காலங்களில் தங்களின் அலுவலகத்திலும், வீட்டிலும் இருந்தபடி அதிகாரிகளுக்கு ஆர்டர்கள் போடுகிற முதல்வர்களைத்தான் பார்த்திருக்கிறேன். அதிகபட்சம் ஹெலிகாப்டரில் விசிட் அடிப்பார்கள்.

முதல்வருக்கு மனம் திறந்த பாராட்டா?
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர்கள் விசிட் செய்ய செல்வது மிக மிக குறைவு. ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொட்டும் மழையிலும் வெள்ள நீர் தொடை வரை சூழ்ந்துள்ள போதும் நடந்து சென்று மக்களை சந்தித்து அவர்களை ஆறுதல் படுத்தியது ரொம்பவே வியவிக்க வைத்தது என்றும் மனம் திறந்து பாராட்டினார் என கூறுகின்றன ராஜ்பவன் வட்டாரங்கள். இந்த தகவலும் ஆளும் தரப்பு பாஷ் செய்யப்பட்டதில் ரொம்பவே மகிழ்ந்து போனார்கள் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications