நாகூர் தர்ஹா கந்தூரி விழா! 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்கிய தமிழக அரசு!
சென்னை: நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகள் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு வக்பு வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் வனத்துறை இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு வழங்கி வருகிறது அரசு.

நாகூர் தர்கா சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் சைய்யது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் சைய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் சைய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் ஆகியோரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து இந்த நிகழ்வு நடைபெற்றது. நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications