விஜய் பேசியது தவறான தகவல்.. லிஸ்ட் போட்டு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!
சென்னை: அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் தவெக தலைவர் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோ மீட்டராக இருந்த அலையாத்திக் காடுகள் இன்று 90 சதுர கிலோ மீட்டராக பெருகியுள்ளது எனவும், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையில் இயங்கி வருவதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

நாகையில் விஜய்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் அண்ணா சிலை பகுதியில் இன்று மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அந்த மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகளை பட்டியலிட்டு, திமுக அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பினார்.
மீன் ஏற்றுமதியில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமான நாகப்பட்டினத்தில், மீன்களைப் பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இல்லை. இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய விஜய், இந்த விவகாரத்தில் வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பும் கபட நாடக திமுக அரசு போல் நாங்கள் இல்லை என்றும், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.
விஜய் பேச்சு
மேலும், கடலோர கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் அழிவதை தடுத்து நிறுத்தி அதற்கொரு வழி ஏற்படுத்த வேண்டிய அரசாங்கத்துக்கு இதை விட ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது, சொந்த குடும்பத்தோட வளர்ச்சியும், சொந்த குடும்பத்தோட சுயநலமும் தான் என விமர்சித்தார் விஜய்.
அதோடு, மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும் என்றும், இங்கிருக்கக்கூடிய மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். கொண்டு வந்தார்களா? வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என இங்கிருக்கக்கூடிய சுற்றுலா தளங்களை மேம்படுத்தலாம். மேம்படுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார் விஜய்.
தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்:
தவறான தகவல் 1 :
"மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மை :
தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.
தவறான தகவல் 2 :
கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.
உண்மை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.
தவறான தகவல் 3 :
மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?
உண்மை :
சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது. தவறான தகவல்களைப் பரப்பாதீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications