சுகாதாரத்துறையே ICUவில் இருக்கு.. செக்யூரிட்டிகளே சிகிச்சை அளிக்கும் அவலம்.. டிடிவி தினகரன் விளாசல்!
சென்னை: மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்படும் கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்றும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை எலி உண்பது போன்றும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. இது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், தீபாவளிக்கு பட்டாசு வெடித்த போது காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், செக்யூரிட்டி சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததால், சிறுவனின் தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோவும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, கேள்விக்குறியாகும் நோயாளிகளின் பாதுகாப்பு, சிகிச்சை அளிப்பதில் அலட்சியப் போக்கு என பல்வேறு நோய்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட காயத்துடன் வந்த 4 வயது சிறுவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டிகளே சிகிச்சை அளித்ததாக செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த திண்பண்டங்களை எலி சாப்பிடுவது போல் வெளியாகியிருக்கும் வீடியோ கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சுகாதாரத் துறையின் மீது எழும் தொடர் புகார்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பி சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு மிகுந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சீர்குலைந்திருக்கும் தமிழக சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியிருக்கும் சூழலில் மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications