''மக்களுக்கு பொறுப்பு வேணும்.. எல்லாமே அவங்க கையில்தான் இருக்கு''..சுகாதாரத்துறை செயலாளர் பளிச்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளில்தான் இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாஸ்க் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ.5 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Recommended Video

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கி விட்டது.

போட்டு தாக்கும் கொரோனா
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 2,000-ஐ கடந்து விட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ், கோவில்கள், தியேட்டர்களில் கட்டுப்பாடுகள், பஸ்களில் செல்வபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

2 வாரம் மிக முக்கியமானது
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளில்தான் இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்திற்கு அடுத்து வரும் 2 வாரங்கள் மிக முக்கியமானதாகும்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு விதிப்பதற்கான சூழல் ஏதும் இல்லை.

ரூ.5 கோடிக்கு மேல் அபராதம்
ஆனால் கொரோனவை தடுப்பது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. அடுத்த இரு வாரங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் மாஸ்க் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ.5 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

79,000 படுக்கை தயார்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு வெண்டிலேட்டர்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 79,000 படுக்கை வசதிகள் உள்ளன. அடுத்த வாரத்திற்குள் மேலும் 15,000 படுக்கைகள் தயார் செய்யப்படும். ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசி இந்தியாவுக்கு வந்தவுடன் தமிழகத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்படும். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications