ஒரே மேடையில் மோடி, ராகுல் விவாதம்! கடிதம் போட்ட‘இந்து’ ராம்! பதில் தந்த ராகுல்.. மவுனமான மோடி?
சென்னை: அமெரிக்காவில் நடைபெறுவதைப் போல ஒரே மேடையில் தலைவர்கள் விவாதிக்க வேண்டும் என 'இந்து' ராம் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கான தேவை என்ன என்பது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால், அது முழுமையாகக் கடைக் கோடி மக்கள் வரை போய் முறையாகச் சேர்ந்துள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.

இந்த ஜனநாயகத்தைச் சரியாகப் பிரதிபலிப்பது பொதுத்தேர்தல்தான். நாடு முழுவதும் 98 கோடிக்கு மேலான வாக்காளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இதுதான் நமது நாட்டின் மிகப்பெரிய திருவிழா.
சாதி, மதம் எனப் பலவற்றைக் கடந்து பலவகுப்பினர் பங்களிப்பு செய்வதால், நிச்சயமாக இது ஒரு திருவிழாதான்.
ஆனால், இந்தப் பொதுத்தேர்தலில் இன்னும் சில சிறப்பான மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தேர்தலில் ஜனாதிபதியாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் தங்களின் கருத்து முன்வைத்து விவாதிக்க முன்வருகிறார்கள்.
ஆனால், நம் நாட்டில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கூட பொது விவாதத்திற்கு ஒரே மேடைக்கு வருவதில்லை. தேர்தல் களத்தில் ஒருவர் ஒரு ஊரில் சவால் விட்டால், அடுத்த வேட்பாளர் அதற்குச் சம்பந்தமே இல்லாத ஊரில் நின்றுகொண்டு சவால் விடுவார்.

அதை மாற்றுவதற்கான முன்முயற்சியில் சில மூத்த பத்திரிகையாளர்கள் இறங்கி உள்ளனர். இந்த 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி, மோடியும் ராகுலும் ஒரே மேடையில் பங்கேற்று விவாதிக்க முன்வர வேண்டும் என அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இந்த முன்முயற்சியில் முக்கியமானவராக இருப்பவர் இந்து ராம். அவர் ராகுல் மற்றும் மோடிக்குக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு என்ன பதில் வந்தது என்பது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே சிலர் இந்த முயற்சி குறித்து கருத்துகளைக் கூறி வருகின்றனர். அதாவது மோடி 10 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர். அதற்கு முன்னால் குஜராத் மாநிலத்தில் ஆட்சியிலிருந்தவர். நீண்ட அரசியல் அனுபவம் மிக்கவர். அவரைப் போய் ராகுலுடன் விவாதிக்க அழைப்பது என்ன முறை?
ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? அல்லது நாட்டின் பிரதமர் வேட்பாளரா? அல்லது இதற்கு முன்பாக நாட்டில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்தி அனுபவம் பெற்றவரா?

இந்தப் பொருத்தமே தவறானது. ஆகவே அதில் பங்கேற்பது சரியாக இருக்காது என சில வலதுசாரிகள் பேசி வருகின்றனர்.
இதற்கு எல்லாம் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் என்ன சொல்கிறார்.ஏன் இந்த விவாத மேடையை ஒருங்கிணைக்கும் முயற்சியை இவர் எடுத்தார்.
அது குறித்து ராம் பேசுகையில், "எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர், 'பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று அடிக்கடி அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் சவால் விடுகிறார்கள். ஆனால் அப்படி யாருமே விவாதத்திற்கு வருவதில்லை. எனவே நாம் அதற்கு ஒரு முன்முயற்சியை எடுக்கலாம்' என்றார்.
அதனடிப்படையில் ஒரு கடிதத்தைத் தயார் செய்தோம். அந்தக் கடிதத்தை ராகுல்காந்திக்கும் மோடிக்கும் அனுப்பி இருந்தோம். நாங்கள் அனுப்பிய கட்சி மே 9ஆம் தேதி டெல்லிக்குச் சென்று அடைந்தது. அதற்கு அடுத்த நாளே ராகுல் ஒரு சிறப்பான பதிலை எங்களுக்கு எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில் ராகுல், 'இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கலந்தாலோசித்தேன். அவரும் இதற்குச் சம்மதித்துள்ளார். நானும் அதற்குத் தயார். அப்படி இல்லை எனில் கார்கேவும் கலந்துகொள்ளத் தயாராக உள்ளார்' என்று கூறியிருந்தார்.

ஆனால், பாஜக தேசிய தலைமையிலிருந்து ஒரு பதிலும் வரவில்லை. யாரும் இது குறித்து கருத்தும் கூறவில்லை. சமூக வலைத்தளங்களில் யார் யாரோ எழுதியுள்ளார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
நாங்கள் என்ன நினைத்தோம் என்றால், இந்த விவாதத்திற்கு ராகுல்காந்தியும் மோடியும்தான் பொருத்தமானவர்கள் என முடிவு செய்திருந்தோம். ஏனென்றால், இவர்கள்தான் தேர்தல் களத்தில் காரசாரமாகக் கருத்துச் சொல்லி வருகிறார்கள். ஆகவே, இந்த இருவரும் விவாதத்திற்கு வந்தால் நல்லது என்று முடிவு செய்திருந்தோம்.
ராகுலும் மோடியும்தான் இன்றைய அரசியல் களத்தில் தனியாகத் தெரிகிறார்கள். ஆகவே இந்த இருவரும் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என நாங்கள் யூகித்தோம். அதனால் இந்த அழைப்பை விடுத்தோம்.
நாட்டில் நிறைய தவறான செய்திகள் பரவுகின்றன. யார் என்ன சொல்கிறார்கள் என்ற உண்மை நிலவரம் தெரிவதில்லை.
மதரீதியாகப் பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதற்கு எல்லாம் பதிலளிக்கக் கூடிய அளவுக்கு இரண்டு பேர் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அதனால் மோடியும் ராகுலும் இணைந்து ஒரே மேடையில் பேசினால் உண்மை மக்களுக்குப் புரியவரும் என நினைத்தோம். மற்றபடி எங்களுக்கு இதில் ஒரு நோக்கமும் இல்லை" என்கிறார்












Click it and Unblock the Notifications