சாலை அமைத்ததில் பல கோடி முறைகேடு.. முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள் மீது வழக்கு
சென்னை: கடந்த 2018 முதல் 2023 ஜூலை வரை தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் சாலைகள் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் நிர்வாக என்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெகதீசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் அமைத்த 4 காண்டிராக்ட் நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை அமைப்பதில் முறைகேடுகள் நடப்பதாகவும், தரமற்ற வகையில் சாலை அமைப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்து ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை விடுவிப்பதாகவும் புகார்கள் உள்ளன. உண்மையில் ஒப்பந்ததாரர் சாலையை அமைத்த பிறகு, அது நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அரசின் என்ஜினியர்கள் அந்தச் சாலையை விரிவாக ஆய்வு செய்வார்கள்.

இந்த ஆய்வின்போது, சாலையின் தரம், பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம், நீளம், அகலம், மற்றும் பிற நிபந்தனைகள் ஆகியவை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி இருக்கிறதா என்று சோதிக்கப்படும். என்ஜினியர் நடத்தும் ஆய்வில், சாலை திருப்திகரமான தரத்தில் இருப்பதாகச் சான்றளிக்கப்பட்ட பின்னரே, ஒப்பந்ததாரருக்குச் செலுத்தப்பட வேண்டிய பணத்தை (பில்) அரசு அல்லது சம்பந்தப்பட்ட துறை விடுவிக்கும்.
தரமற்ற வேலை நடந்திருந்தால், அதைச் சரிசெய்ய ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்படும், அல்லது பணப்பட்டுவாடா நிறுத்தி வைக்கப்படும். இந்த நடைமுறை பொதுப் பணிகளின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது. ஆனால் உண்மையில் இது நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விகள் இருக்கிறது. ஏனெனில் சாலைகள் அமைக்கப்பட்ட ஒரு மாதம் கூட தாக்குப்பிடிப்பது இல்லை.. இதனால் அங்கு பழையபடியே இருக்கிறது.
அப்படி நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக மாநகராட்சி என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 முதல் 2023 ஜூலை வரை தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் சாலைகள் அமைத்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் பூர்வாங்க விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் 302 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் அமைத்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதன்பேரில், லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிர்வாக என்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஜெகதீசன் (வயது 61) என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும், சாலைகள் அமைத்த 4 காண்டிராக்ட் நிறுவனங்கள் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமானவை என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த பிறகு கைது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
