நல்லா சீட்டா எடுத்து போடுங்க.. பதவியேற்க தேதி குறிக்கும் தலைகள்! ஜோசியர்களை மொய்க்கும் சீனியர்கள்!
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்ற பதட்டம் ஒருபுறம் இருந்தாலும், "ஆட்சி நமதே" என்ற நம்பிக்கையில் முக்கிய அரசியல் கட்சிகள் பதவியேற்பு விழாவுக்கான தேதிகளை தங்களுக்கு நெருக்கமான ஜோசியர்கள் மூலம் பார்த்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக முடிந்துவிட்டது. பல தரப்பினரும் இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருந்ததாகக் கூறி, இதை 'வரலாறு காணாத வாக்குப்பதிவு' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 5 கோடி 73 லட்சம் வாக்காளர்களில் சுமார் 4 கோடி 82 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல்
அதிகளவு வாக்குப்பதிவு நடந்ததால், யாருக்கு சாதகமாக முடிவு இருக்கும் என்ற கணிப்புகள் பலவாறாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் முதல் முறையாக நடிகர் விஜயின் கட்சி களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய கட்சியின் வருகை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளின் வாக்கு வங்கிக்கு சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பதவியேற்பு தேதி
இதுகுறித்து இரு தரப்பிலும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலிலும் கூட்டணி பலம் தங்களுக்கே அதிகம் இருப்பதாக திமுக தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது. கடந்த முறை போல அதிக இடங்களை பெற முடியாவிட்டாலும், 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் குறித்து பெரிதாக பதற்றம் கொள்ளாமல், ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையில் பதவியேற்பு விழாவுக்கான தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திமுக அதிமுக ஆலோசனை
மறுபுறம் அதிமுக தரப்பிலும் அதே அளவுக்கு நம்பிக்கை காணப்படுகிறது. இந்த முறை ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகமாக இருப்பதாகவும், அதன் பலன் தங்களுக்கு கிடைக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். மேலும், தவெக தனியாக போட்டியிட்டதால், சிறுபான்மையினர், மீனவர்கள், தலித் வாக்குகள் திமுகவிற்கு செல்லாமல் பிரிந்திருக்கும் என்பதும் அவர்களின் முக்கிய கணிப்பாக உள்ளது. இதனால் இந்த முறை 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அதிமுக தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.
அமைச்சர் பதவி
இரு பெரிய கட்சிகளிலும் முக்கிய வேட்பாளர்கள் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்களை சந்தித்து பதவியைப் பெற முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தீவிரமாக செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது.
தவெக நம்பிக்கை
இதற்கிடையில், புதிய கட்சியான தவெக தரப்பினரும் தாங்களே ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்தவர்களின் ஆதரவு தங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர். மொத்தத்தில், இந்த தேர்தல் முடிவு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. யார் ஆட்சி அமைப்பர், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கேள்விகளுக்கான பதில் அனைத்தும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் போது தான் தெரியவரும். அதுவரை பொறுமையே பெருமை!












Click it and Unblock the Notifications