கோட நாடு எஸ்டேட் விசாரணை சூடு பிடிக்கிறது: முக்கிய நபரை நோக்கி நகரும் போலீஸ்?
சென்னை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் 1991-96-ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் ஜெயலிதாவுக்கு மிகவும் பிடித்தமான இடமாக மாறிப்போனது.
Recommended Video
ஆட்சி காலத்திலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி அங்கு சென்று பல நாட்கள் ஓய்வு எடுப்பதை ஜெயலலிதா வாடிக்கையாக வைத்திருந்தார். தமிழகம் தொடர்பாக பல முக்கிய முடிவுகளை இங்கிருந்தபடியே ஜெயலலிதா எடுத்துள்ளார்.

கோடநாடு எஸ்டேட் விவகாரம்
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கோடநாடு எஸ்டேட், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மர்ம எஸ்டேட்டாக மாறிப்போனது. சினிமா மிஞ்சும் பதற வைக்கும் சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடந்தன.. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

அடுத்தடுத்த சம்பவம்
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கனகராஜ் ஒரு விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் என்பவரும் கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரது மனைவியும், மகளும் இறந்தனர். தொடந்து அந்த எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார்.

மீண்டும் சூடுபிடித்துள்ளது
இதற்கிடையே 2019-ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சயானும் அவரது நண்பருமான வாளையார் மனோஜும் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் கைது செய்யபட்டனர். தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கோடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க திமுக அரசு முடிவு செய்தது.

மு.க.ஸ்டாலின் உறுதி
இதனை தொடர்ந்து சயானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறியதாக செய்திகள் வலம் வந்ததாக தெரிகிறது. இதன்பின்னர் நீதிமன்றம் உத்தரவுப்படி கோடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது. இதில் அரசின் தலையீடு ஏதும் இல்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இதன்பின்னர் கோடநாடு விவகாரத்தை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறி, கலைவாணர் அரங்கத்தின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு ஒன்றையும் அளித்தனர். கோடநாடு விவகாரத்தில் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

முக்கிய புள்ளி இவர்தான்
இந்த நிலையில் கோடநாடு வழக்கில் சயானின் வாக்குமூலத்தை பெற்றிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. கோட நாடு எஸ்டேட்டில் அனைத்து அறைகளுக்கும் பர்னிச்சர் வேலை பார்த்த கேரளாவை சேர்ந்த சஜீவனுக்கு அனைத்து விவகாரங்களும் வில்லங்கங்களும் தெரியும் என கூறப்படுகிறது. எனவே அவரை விசாரிக்கவும் போலீஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

கொடுப்பாரா
சயானின் வாக்குமூலத்தை விட , சஜீவன் வாக்குமூலம் கொடுத்தால் அதுதான் புதிய சிக்கலை உருவாக்கும். சஜீவனின் ஏற்பாட்டில்தான் சயான் டீம் செயல்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதில் சூத்திரதாரி சஜீவன்தான் என்றும் இவருக்கும் இந்த சம்பவத்தை நடத்தச் சொல்லி உத்தரவிட்டவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனவும் தகவல்கள் உலா வருவதாக தெரிகிறது. இதற்கான ஆதாரங்களையும் போலீஸார் திரட்டி வைத்திருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலினின் அனுமதி கிடைத்தால் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த வழக்கில் அடுத்த அதிரடி நடக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications