குற்றவாளிகளை அலறவிட்ட தமிழ்நாடு காவல்துறையின் ‘ஆபரேஷன் வாரண்ட்’.. 48 மணி நேரத்தில் 1,004 பேர் கைது!
கடந்த 48 மணி நேரத்தில்1,004 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் 1004 பேர் கடந்த 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளதால், நீதிமன்றங்களால் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதினார்.
இதையடுத்து பிப்ரவரி 28 முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 10 நாட்கள் 'ஆபரேஷன் வாரண்ட்' என்ற நடவடிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார்.

மெத்தனம்?
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் குறித்து உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகளை முறையாக நிறைவேற்றுவதில் காவல்துறை முறையாக செயல்படவில்லை என்றும், மெத்தனப் போக்காக உள்ளதாகவும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டுகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள், மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், உதவி அமர்வு நீதிபதிகள், சிறப்பு அமர்வு நீதிபதிகள் , மாஜிஸ்திரேட்டுகள் என அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

டிஜிபிக்கு கடிதம்
இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதினார். அனைத்து காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உடனடியாக நிலுவையில் உள்ள அனைத்து வாரன்ட்டுகளையும் நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆபரேஷன் வாரண்ட்
இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல்துறை ஆணையர்களுக்கும், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி கட்ந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை ஆபரேஷன் வார்ண்ட் என்ற நடவடிக்கை தமிழ்நாடு காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1004 பேர்
நிலுவையில் உள்ள அனைத்து நீதிமன்ற பிடியாணைகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கடந்த 48 மணி நேரத்தில், குற்றவாளிகள், ரௌடிகள் என தமிழ்நாடு முழுவதும் 1,004 அரெஸ்ட் வாரண்ட்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications