கோடை வெயிலில் எப்படி பிரச்சாரம் செய்வது? ஜூஸ் பாக்கெட்களில் கட்சி சின்னம்? அரசியல் கட்சிகள் நூதனம்!
சென்னை: சட்டசபை தேர்தல் நடக்கும் காலம் கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கும். ஆனாலும் வீடு வீடாக சென்று வாக்கு கேட்காமல் இருக்க முடியாது. இதற்காக ஒரு புதிய டிரெண்டை தென் மண்டலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உருவாக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போடுங்கம்மா ஓட்டு "இந்த" சின்னத்தை பார்த்து... என சுவர்களில் இப்போதே விளம்பரங்களை எழுத பலர் தொடங்கிவிட்டனர். அத்துடன் ஆங்காங்கே பொதுக் கூட்டங்களை நடத்தி தங்கள் ஆட்சியின் சாதனைகளையும் எதிர்க்கட்சியின் தவறுகளையும், ஆளும் கட்சியின் மக்கள் விரோத போக்கையும் சொல்லி விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, ஆயினும் அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என பம்பரம் போல் சுழன்று வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மிஞ்சி போனால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் எப்போது என்பது குறித்து தகவல்கள் தெரியவந்துவிடும்.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும். இந்த காலகட்டத்தில்தான் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்.
கட்சி சார்பில் அறிவிக்கும் வேட்பாளர்கள், அந்த தொகுதியின் வட்டம், மாவட்டம் என எல்லா நிர்வாகிகளும் வேட்பாளர்களும் சேர்ந்து வாக்கு கேட்க செல்வதுண்டு. அது போல் கூட்டணி கட்சி போட்டியிட்டால் அந்த கட்சியினருடன் மற்ற கட்சி நிர்வாகிகளும் செல்ல வேண்டியிருக்கும்.
வெயில் கொளுத்தி எடுக்கும். இதனால் தாகத்தை தீர்க்க இளநீர், ஜூஸ், நீர் மோர், பானகம் உள்ளிட்டவை நிர்வாகிகளுக்கு சப்ளை செய்யப்படும். இதற்கான நிதி வேட்பாளர்கள் செலவு செய்வார்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை வெயில் தாளித்து எடுக்கும் என்பதால்தான் பிரச்சார கூட்டங்கள் மாலை வேளையில் நடைபெறுகின்றன.
அதிலும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மண்டல தொகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும். ஆனாலும் வாக்கு கேட்க சுட்டெரிக்கும் வெயிலில்தான் செல்ல வேண்டியது இருக்கிறது. அந்த நேரத்தில் டீ, காபியை விட ஜில் ஜில் குளிர்பானங்களே கட்சியினரை ஆஸ்வாசப்படுத்தும்.
ஜூஸ் பாக்கெட்டுகளை விநியோகித்தால் வேட்பாளருக்கு பட்ஜெட்டில் துண்டுவிழும் என்பதால் நீர் மோர், குளிர்ச்சியான தண்ணீர், பானகம் உள்ளிட்டவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறதாம்.
இதனால் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வெயில் காலத்தில் குளிர்பானங்கள் விற்பனையாவதை காட்டிலும் தேர்தல் நேரத்தில் விற்பனையாவது அதிக வசூலை தரும் என்பதால் மதுரையில் உள்ள அரசியல் கட்சிகளை குளிர்பான நிறுவனங்களின் நிர்வாகிகள் அணுகத் தொடங்கியுள்ளனராம்.
அப்போது அவர்கள் குளிர்பான பாக்கெட்டுகளில் கட்சியின் சின்னம், வேட்பாளரின் பெயரை அச்சடித்து தருவதாகவும் ஆர்டரை தங்களுக்கு வழங்குமாறும் கேட்டு வருகிறார்களாம். எனவே கட்சி சின்னம், வேட்பாளரின் பெயர் பொறித்த குளிர்பானங்கள் விரைவில் பிரச்சாரங்களில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications