தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு 38 நாட்கள் கோடை விடுமுறை.. பள்ளி திறப்பு தேதி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அதாவது வரும் ஏப்ரல் 25 முதல் முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 முதல் 21 ஆம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்றது. மேலும் 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மதியத்தில் முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளிகளில் தேர்வு
தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
எப்போது முதல் விடுமுறை
இந்நிலையில், தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த நாளில் விடுமுறை தொடங்கும் என்றும், எந்த தேதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது. 25.04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியினை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 2 பள்ளி திறப்பு
2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 நாட்கள் விடுமுறை
இதன் மூலம், தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 38 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனினும், விடுமுறை நாட்கள் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த ஆண்டுகளில் ஜூன் மாத தொடக்கத்திலும் வெயில் கொளுத்தியது. இதனால் ஒரு வாரம் கழித்து தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆகவே, இந்த முறையும் வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications