உங்களை தனியா விட்டுட்டு போய்ட்டாங்களே.. பாத்தியலா அத.. நயினார் நாகேந்திரனை வாரிய சபாநாயகர்!
சென்னை: தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதை அடுத்து உங்களை தனியா விட்டுட்டு போய்ட்டாங்களே பாத்தியலா என சபாநாயகர் அப்பாவு கேட்டவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்யும் திருத்த மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குடியேறிய இஸ்லாமிய சமூகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அது போல் இலங்கைத் தமிழர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

டெல்லியில் போராட்டம்
தலைநகர் டெல்லியில் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைத்து தரப்பினரும் 101 நாட்கள் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஹாகீன் பாக் என்ற இடத்தில் நடந்த இந்த போராட்டம் ஷாகீன் பாக் போராட்டம் என்றே அழைக்கப்படுகிறது. அது போல் இவர்கள் தேசிய குடிமக்கள் பதிவை கண்டித்தும் போராட்டத்தை நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தார் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது . அதன்படி தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்
இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் இந்தச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டமில்லை என்றார்.

சபாநாயகர் அப்பாவு
அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு இந்த சட்டம் என்றால் எந்த சட்டம் முதல்வர் கொண்டு வந்த சட்டமா என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே நயினார் நாகேந்திரன், முதல்வர் கொண்டு வந்ததை சொல்லவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என குறிப்பிட்டார்.

அவையில் சிரிப்பலை
உடனே சபாநாயகர் அப்பாவு, அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் நன்றி என கூறினார். இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. அப்போது சுதாரித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன், தவறாக குறிப்பிட்டுவிட்டேன், மத்திய அரசின் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி வெளிநடப்பு செய்கிறோம் என தெரிவித்தார். அப்போதும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "உங்களை தனியாக விட்டுட்டு வெளிநடப்பு (அதிமுக) பண்ணிட்டாங்க பாத்தீங்களா என கேட்டதும், பேரவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications