வேலூரில் வீசிய வெப்ப அலை... 106 டிகிரி பதிவு! கரூர், திருச்சி, திருத்தணியிலும் மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூர் 106.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெரித்தது.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை கோடை வெப்பம் வாட்டி வதைப்பது இயல்பு.
குறிப்பாக மே மாதம் சூரியன் அதிகபட்ச சூட்டை இந்திய துணை கண்டத்தின் மீது இறக்கிவிடும். இதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்படுன்றன.

வேலூர், கரூரில் உச்சபட்சம்
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வழக்கம்போலவே அதிகபட்சமாக வட மாவட்டமான வேலூரில் 41.3 டிகிரி செல்சியஸ், அதாவது 106.3 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. அடுத்ததாக கரூர் பரமத்தியில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்து இருக்கிறது.

100-ஐ தாண்டிய மாவட்டங்கள்
அடுத்தததாக மத்திய மாவட்டமான திருச்சியில் சற்று குறைவாக 105.2 டிகிரி , திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 105 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேற்கு மாவட்டங்களான ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சேலத்தில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் சுட்டெரித்துள்ளது. வட மாவட்டமான தருமபுரியில் 102.5 டிகிரி, தென் மாவட்டமான மதுரையில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும் சூரியன் சுட்டெரித்து இருக்கிறது.

தலைநகர் சென்னை
சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 99.32 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 96.24 ஃபாரன்ஹீட் அளவிலும் வெப்பம் வதைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் மொத்தம் 7 மாவட்டங்களில் 100 டிகிருக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குளிர் பிரதேசங்களின் நிலை
தமிழ்நாட்டின் குளிர் பிரதேசங்களான ஊட்டியில் 78.9 ஃபாரன்ஹீட் வெப்பமும், குன்னூரில் 78.8, வால்பாறையில் 82.4 ஃபாரன்ஹீட் வெப்பமும், கொடைக்கானலில் 70.52 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன் ஊட்டி, கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களுக்கு சென்று வெயிலுக்கு விடுமுறை அளிக்க மக்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications