வங்கக்கடலில் 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை - தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் அடுத்த 5 நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதி வட தமிழகத்தை நோக்கி நெருங்குவதால் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டி வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

ஏரிகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. பல ஆறுகளில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் மக்கள் இருளில் சிக்கி தவித்தனர்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11ம் தேதி வட தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications