திநகர் கிளப் நிலத்தில் இருந்து காலி செய்ய வேண்டும்.. பிரபல ஓட்டல் நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை தியாகராய நகரில் 2 பிரிவினர்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த தியாகராய நகர் சமூக மனமகிழ் மன்றம் (தியாகராயநகர் கிளப்) 1932-ம் ஆண்டு 14 கிரவுண்ட் நிலத்தில் தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை அண்ணாமலைச் செட்டியார் தானமாக வழங்கி இருந்தார். இந்நிலையில் ஒப்பந்த விதிகளை மீறி வங்கிக்கு உள்வாடகை கொடுத்ததால், இடத்தை காலி செய்யும்படி அங்கிருந்த ஓட்டல் நிர்வாகத்துக்கு கிளப் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை உயர்நீதிமன்றமும் தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் 2 பிரிவினர்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த தியாகராய நகர் சமூக மனமகிழ் மன்றம் (தியாகராயநகர் கிளப்) 1932-ம் ஆண்டு 14 கிரவுண்ட் நிலத்தில் தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை அண்ணாமலைச் செட்டியார் தானமாக வழங்கினார். இந்த கிளப்பின் முதல் தலைவராக ராஜாஜி பொறுப்பு வகித்தார்.

இங்கு ஒப்பந்த விதிகளை மீறி வங்கிக்கு உள்வாடகை கொடுத்ததால், இடத்தை காலி செய்யும்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு கிளப் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, காலி இடத்தில் செலவு செய்து கட்டிடம் கட்டியுள்ளதால், சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, அந்த இடத்தை தனக்கே விற்பனை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓட்டல் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் இடத்தை காலி செய்யவேண்டும் என்ற நோட்டீசை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உரிமையியல் கோர்ட்டு, ஓட்டல் நிர்வாகத்துக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தியாராயநகர் கிளப் செயலாளர் அசோக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். விசாரணையின்போது ஒப்பந்த விதிகளை மீறி கட்டிடத்தை உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.
மேலும் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர், எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இடத்தை பயன்படுத்தியுள்ளதால், 2010-ம் ஆண்டு முதல் இன்றுவரை மாதம் ரூ.2 லட்சம் வாடகையாக தர உட்லேண்ட்ஸ் ஓட்டலுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, "உட்லேண்ட்ஸ் ஓட்டல் நிர்வாகம் 3 மாதங்களுக்குள் மனுதாரர் நிலத்தில் இருந்து காலி செய்யவேண்டும். மாத வாடகையாக சுமார் ரூ.3 கோடி கேட்கும் மனுவை கீழ் கோர்ட்டு பரிசீலித்து, தகுந்த வாடகையை நிர்ணயித்து உத்தரவிடவேண்டும்" என்று தீர்ப்பு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications