வரைமுறையின்றி விமர்சிக்கிறார்.. சீமான் மீது நடவடிக்கை தேவை.. கே.எஸ். அழகிரி மீண்டும் வலியுறுத்தல்..!
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
சீமான் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ள அவர், காங்கிரஸ் குறித்து சீமான் ஏற்கத்தகாத வார்த்தைகளில் விமர்சிப்பதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.
இதனிடையே கோவையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் உத்தம் ரெட்டியுடன் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது மேலும் இது தொடர்பாக பேசினார்.

நாம் தமிழர்
''நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களாக காங்கிரஸ் கட்சியை ஏற்கத்தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். விமர்சிக்க கூடாது எனக் கூறவில்லை, அதற்குரிய வார்த்தை வரம்புகள் இருக்கின்றன. சீமானின் கொள்கைகள் எடுப்படாத நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.''

புகார் இல்லை
''அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் வன்முறை பேசுவதால் விளம்பரம் தேடிக் கொள்கிறார். சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் புகார் மீது 7 தினங்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முழுக்க முழுக்க கட்சி சார்ந்த புகாரே தவிர தனிப்பட்ட புகார் இல்லை.''

சட்ட நடவடிக்கை
''விமர்சனங்கள் என்பது பொதுவானவையே, அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் சீமான் அவர்கள் தொடர்ந்து தவறான வர்த்தைகளை பயன்படுத்தி தவறான ரீதியில் காங்கிரஸை விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது போன்ற நிகழ்வுகளை அரசாங்கம் தான் தடை செய்யவேண்டும். இதற்கான நடவடிக்கையை சட்ட ரீதியாக உடனடியாக எடுக்க வேண்டும்.'' இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

பதில் இல்லை
முன்னதாக பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் உத்தம்ரெட்டி எம்.பி., இந்தியாவில் அதிகளவு போதைப் பொருள் விற்பனை நடப்பதாகவும் அமேசான், இ.காமர்ஸ் போன்ற நிறுவனங்கள் சட்ட கட்டணம் என்ற பெயரில் ரூ. 8, 546 கோடி வழங்கியுள்ளதாகவும் ஆனால் இது குறித்து கேட்டால் மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை எனவும் கூறினார். வருடத்தில் 1 கோடி பேர் நாட்டில் வேலை இழப்பதாக கூறிய உத்தம் ரெட்டி, உ.பி.யில் விவசாயிகள் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மவுனம் சாதிப்பதாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications