கோயில் நிலத்தை மீட்க கோரிய வழக்கு.. அதிரடி ஆக்சனில் இறங்கிய ஹைகோர்ட்.. 5 துறைகளுக்கு நோட்டீஸ்
சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் பொது சொத்துக்கள் மீட்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு விரிவான பதில் மனுவை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைலள், கோவில் மற்றும் பொது சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பாப்பாரப்பட்டியில் உள்ள அருள்மிகு அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அறநிலையத்துறை
பரம்பரை அறங்காவலர்களான 5 பேரின் துணையுடன் கோவில் சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்து தமிழக அரசு, இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்டோரிடம் 2014ஆம் ஆண்டு முதல் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் நிலங்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஆ.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, இன்று (ஜூலை 22) முதல் 3 நாட்களுக்கு அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலின் நிலங்கள் அளவிடும் பணிகள் நடத்தப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

ஐஜிக்கு உத்தரவு
அதனை பதிவு செய்த நீதிபதிகள், நில அளவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தினருக்கு அறிவுறுத்தும்படி, மேற்கு மண்டல ஐ.ஜி.-க்கு உத்தரவிட்டனர்.

சொத்துக்கள்
மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் பொது சொத்துக்களை மீட்பதற்கான ஒருங்கிணைந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளதாக கூறி, இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை செயலாளர்களையும், பேரூராட்சிகளின் இயக்குனரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்ததுடன், வழக்கு குறித்து அவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications