மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..எம்ஜிஆர் எனும் மந்திர சொல்! வாத்தியாராய் வணங்கும் மக்கள்! காரணம்?
சென்னை : அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்து இந்தியா முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் பிறந்த நாள் இன்று. இன்றும் ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தில் அவர் வாத்தியாராய் வாழ்ந்து கொண்டிருக்க என்ன காரணம்?
இந்திய அரசியலில் இருந்து தென்னிந்திய அரசியல் குறிப்பாக தமிழக அரசியல் முற்றிலும் வேறுபட்டது. காமராஜருக்கு பிறகு மக்களை நேரிடையாக சந்தித்து தமிழகத்தை ஆண்டவர்கள் அனைவரும் திரைத்துறையில் இருந்து மக்களை சந்தித்து கோட்டையை ஆண்டவர்களே.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும் பலர் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமைச்சர்களாகவும் சட்ட சபையை அலங்கரித்து இருக்கிறார்கள். தற்போது வரை அது தொடர்கிறது.

எம்ஜிஆர் எனும் சகாப்தம்
திரையில் தோன்றிய சக கலைஞனை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் பழக்கம் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. பிற மாநிலங்களில் என்டிஆர்-க்கு பிறகு அது பலருக்கு வாய்க்காமலேயே போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் இன்றுவரை திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அரசியல் ஆசையை எட்டிப் பார்க்க வைத்தது என்னவோ எம்ஜிஆர் தான். நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என பாடியதோடு மட்டுமல்லாமல் அதனை செய்தும் காட்டியவர் எம்ஜிஆர்.

புரட்சித் தலைவர்
எம்ஜிஆர் எனும் மாபெரும் சகாப்தத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி முடித்து சில ஆண்டுகள் கூட கடந்து விட்டது. ஆனாலும் தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர் என்ற பட்டப் பெயரை இன்னும் பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சூப்பர் ஸ்டாருக்கு கூட இன்று போட்டிகள் இருக்கும் நிலையில் புரட்சித்தலைவர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். புரட்சித் தலைவர் என்ற பெயரை கட்சிக்காரர்கள் வேண்டுமானாலும் இன்று வரை உபயோகப்படுத்தலாம் ஆனால் சாதாரண கூலித் தொழிலாளியில் இருந்து மிகப்பெரிய திரைத்துறை ஜாம்பவான்கள் வரை வாத்தியார் என தான் இன்றும் அவரை அடைமொழி இட்டு அழைப்பார்கள்.

என்ன காரணம்?
ஏழைகளோடு ஏழைகளாக மக்களோடு மக்களாக பழகி பின்னிப்பிணைந்த எம்ஜிஆரை இன்னும் வாத்தியார் எனவே அழைத்து வருகிறார்கள். அதற்கு பின்னர் மிகப்பெரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்குள் புகுந்து சாதாரண நாயகனாக வந்து விட்டோம் அடுத்து என்ன தயாரிப்பாளர் இயக்குனர் பிறகு ஓய்வு என எடுக்காமல் அவர் வகுத்த பாதை மிக நீண்டது. தனது ஒவ்வொரு பாடலிலும் யாராவது ஒருவருக்கு அறிவுரை சொல்வதுதான் எம்ஜிஆர் வாடிக்கை.

எம்ஜிஆரின் குரல்
தனது நடை உடை பாவனையை தனக்கு எப்படி இருக்கிறது என்பதை விட தனது ரசிகர்களுக்கு எப்படி இருக்கும் என நினைத்து அதனை செதுக்கி செதுக்கி மெருகேற்றியதால் தான் இன்றும் எம்ஜிஆர் ஆகவே இருக்கிறார். நீங்கள் அவரது ஒவ்வொரு பாடலையும் நினைத்துப் பாருங்களேன். ஒரு பாடல் குழந்தைகளுக்கு வேண்டுமா திருடாதே பாப்பா திருடாதே, ஏழைகளுக்கு வேண்டுமா நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், இளைஞர்களுக்கு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஏன் அனைவருக்குமே நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆருக்காக ஒலித்த டி எம் சௌந்தரராஜன் குரல் தற்போது வரை அது எம்ஜிஆர் குரலாக தான் பலருக்கும் இருக்கும்.

நிஜ வாழ்க்கை நாயகன்
மது குடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார் , பெண்களை மரியாதை குறைவாக நடத்த மாட்டார் ஏழைகளுக்கு உதவுவார் இப்படி திரைத்துறையில் தன்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக காட்டிக்கொண்ட எம்ஜிஆர் திரைக்கு வெளியேயும் அரசியல் வாழ்க்கையிலும் உச்சம் தொட்டவர், சினிமா அரசியல் என இரு தண்டவாளங்களில் ஒரே நேரத்தில் பயணிக்கும் ரயில் போல இருந்தவர் எம்ஜிஆர் ,ஆனால் இரண்டு துறைகளிலும் இறுதிவரை அவருக்கு வெற்றி மட்டும் தான் கிடைத்தது.

ரசிகர்கள் எண்ணிக்கை
எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றால் உணவு நிச்சயம் பட்டினியோடு நம்மை அனுப்ப மாட்டார் என அந்தக் கால நினைவுகளை அசைபோடுபவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்றால் அது எம்ஜிஆர்க்கு சொந்தமானது. இன்றும் எம்ஜிஆரை நடிகராக அரசியல் கட்சித் தலைவராக அல்லாமல் தங்கள் வீட்டில் ஒருவராக புகைப்படத்தை வைத்து சாமி கும்பிடுபவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எம்ஜிஆரின் உருவத்தை நெஞ்சில் தாங்கி அவரது டாலரை கழுத்தில் கட்டிக்கொண்டு புரட்சித்தலைவர் வாழ்க எனும் முழக்கங்களை இடுபவர்களின் எண்ணிக்கையை கணக்கில் அடங்க முடியாது.

இன்னும் பார்க்கலாம்..
அனைவருக்கும் தெரிந்த ஆனால் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அது எம்ஜிஆர் கைக்கடிகாரம். அறிவியல் நாகரீகம் வளர்ந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் எம்.ஜி.ஆரின் கல்லறையில் கடிகார ஓசை வரும் என தற்போது வரை காதை வைத்து கேட்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இப்போது கூட மெரினா கடற்கரையில் சென்று பார்த்தால் எம்ஜிஆரின் சமாதியில் காதில் வைத்து கேட்டுக் கொண்டிருப்பதை தற்போது வரை பார்க்கலாம்.. அதனால் தான் எம்ஜிஆர்ஆக இருக்கிறார்.. இல்லை இல்லை வாத்தியாராகவே இருக்கிறார்.












Click it and Unblock the Notifications