டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
சென்னை: திமுகவின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்துபோய் உள்ளதோடு, மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவை பார்க்கின்றனர் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி இன்று பாஜக தொண்டர்களுடன் நமோ செயலியில் உரையாடி வருகிறார். இந்த உரையாடலின்போது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. ஆனால் இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.

இதனால் பாஜக தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 19 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது.
மீதமுள்ள 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராமதாஸின் பாமகவுக்கு 10 தொகுதிகளும், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதிகளும், ஓபிஎஸ் அணி, பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமுமக, தேவநாதனின் இமகமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறவில்லை. 2014ல் வென்ற பொன் ராதாகிருஷ்ணன் கூட 2019 தேர்தலில் தோற்றார். ஆனால் இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் சில இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று மாலையில் தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடி வருகிறார். ‛எனது பூத் வலிமையான பூத்’ என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛ இன்று மாலை 5 மணிக்க நமோ செயலி மூலம் கடின உழைப்பாளிகளாக உள்ள தமிழக பாஜக தொண்டர்களுடன் ‛எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் உடையாட இருக்கிறேன். தமி்நாட்டில் உள்ள பாஜக தொண்டர்கள் எப்படி பொதுமக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும். கட்சியின் நல்லாட்சியை மக்களிடம் எப்படி திறமையாக எடுத்து கூறுவது என்பது பற்றி விளக்கப்பட உள்ளது.
அதேபோல் இன்னொரு உண்மை என்னவென்றால் திமுகவின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்துபோய் உள்ள நிலையில் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவை பார்க்கின்றனர் என்பது தான்’’ என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடலை தொடங்கினார்.
பிரதமர் மோடி ஹிந்தியில் தொண்டர்களுடன் பேசினார். தமிழக பாஜக தொண்டர்கள் தமிழிலில் பதிலளித்தனர். பிரதமர் மோடி, பாஜக தொண்டர்கள் பேசுவதை ஹிந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஹிந்திக்கும் ஒருவர் மொழிப்பெயர்த்தார். இந்த சமயத்தில் பூத் கமிட்டியை சேர்ந்த நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்ந்து உள்ளதா? பூத் பணிகள் எப்படி செல்கிறது? பெண்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கேள்வியாக கேட்டார். அதற்கு பாஜக தொண்டர்கள் பதிலளித்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடி அட்வைஸ் வழங்கினார். குறிப்பாக மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications