லோக்சபா தேர்தல்! நாளை கோயம்பேடு சந்தை இயங்காது.. தியேட்டர்களில் காலை, மதியம் காட்சி ரத்து
சென்னை: தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தலை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான லோக்சபா தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கிடையே 4 முனை போட்டி நிலவுகிறது.

வாக்குப் பதிவு அன்று 100 சதவீதம் வாக்களிப்பை கொண்டு வர அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நிறுவனமாவது விடுமுறை அறிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளைய தினம் வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், உயர்நீதிமன்றம், தியேட்டர்கள். தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மிகப் பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் இரு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மார்க்கெட்டில் பணிபுரியும் வணிகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
எனவே சில்லறை காய்கறி, பழங்கள் விற்பனையாளர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீலாங்கரை கடற்கரையில் ஆழ்கடலில் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தன்னார்வலர்கள் நடத்தினர்.
இந்த நிலையில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் விதமாக சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் நாளை காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications