சென்னை, கோவை உட்பட 5 நகரங்களில் முழு ஊரடங்கு.. காய்கறி கடை கூட திறக்காது.. முதல்வர் உத்தரவு
சென்னை: சென்னை, கோவை, மதுரையில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை, நான்கு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
ஏப்ரல் 26 ஞாயிறு காலை 6 மணி முதல், ஏப்ரல் 29ம் தேதி புதன் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். மருத்துவமனை, மெடிக்கல் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். காவல்துறை, வருவாய் பேரிடர், உள்ளாட்சி, குடிநீர் வழங்கல், மின்சார துறை உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் மட்டுமே செயல்படும்.
வங்கி போன்ற பணியிடங்களில் 33% பணியாளர்களை கொண்டு மட்டும் இயங்கலாம். சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
மேற்கண்ட மாநகரங்களில், உணவகங்களில் தொலைபேசி மூலம் மட்டுமே ஆர்டர் செய்து உணவைப் பெற முடியும். நேரில் சென்று உணவு வாங்குவது கூடாது. காய்கறி வாங்குவதற்கும் வெளியே செல்லக் கூடாது. இது தான் முழு ஊரடங்கு என்பதன் பொருளாகும்.
கோயம்பேடு மார்க்கெட் செயல்படும். ஆனால் நெறிமுறைகள் செயல்படுத்தப்படும். வேறு எந்த ஒரு காய்கறி கடைகளுக்கும் இந்த நான்கு நாட்களிலும் அனுமதி கிடையாது. பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட மற்ற அரசு துறைகளும் இயங்காது.

அரசு அறிக்கை
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவ துறை சார்ந்த பணிகள்.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத் துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

ஏடிஎம்கள் செயல்படும்
இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

முதியோர் உதவி
முதியோர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும். மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community kitchens) தொடர்ந்து செயல்படும்.

கடைகளுக்கு அனுமதியில்லை
ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள், பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள், விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

அரசு அலுவலகங்கள்
மேற்கண்ட பணிகளை தவிர பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள், (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. மேற்குறிப்பிட்ட மாநகராட்சி தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

ஒத்துழைப்பு
இக்காலகட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். இந்த பகுதிகளில் தினமும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். தடையை மீறினால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும் தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்படி, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications