இன்று வெளியே போக போறீங்களா.. "கவனம்.." சென்னையில் ஒரே நாளில் மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை: தலைநகர் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மட்டும் மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நமது நாட்டில் மிகவும் விரிவான ஒரு பொது போக்குவரத்தைக் கொண்ட ஒரு நகரமாகச் சென்னை இருக்கிறது. பேருந்து, மின்சார ரயில்கள், மெட்ரோ என விரிவான பொது போக்குவரத்தைக் கொண்டு நகரமாகச் சென்னை உள்ளது.

அதிலும் குறிப்பாகச் சென்னையில் மின்சார ரயில்கள் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. நகர்ப்புறத்தையும் புறநகரையும் இணைப்பதால் மின்சார ரயில்கள் முக்கியமானதாக இருக்கிறது. டிக்கெட் ரேட்டும் குறைவாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் சாய்ஸாக மின்சார ரயில்கள் உள்ளன.
மின்சார ரயில்கள்: வார நாட்களில் அதிலும் குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். அதேநேரம் ரயில்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்க அவ்வப்போது ரயில் தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி இன்றைய தினம் கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையம் இடையே வரும் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இன்று (பிப். 25) காலை 11 மணிக்குத் தொடங்கும் பராமரிப்பு பணிகள் மாலை 3.15 மணி வரை நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாகச் சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி பராமரிப்பு பணிகள் காரணமாகக் காலை 11 மணி முதல் மாலை 3.15 வரை சென்னை கடற்கரை- தாம்பரம், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
தென்னக ரயில்வே: இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே பிப்ரவரி 25-ல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: மேலும், பயணிகள் வசதிக்காகத் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தைச் சந்திக்காமல் இருக்கச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த வாரமும் பராமரிப்பு பணிகள் நடந்ததால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளியே செல்லும் பயணிகள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications