அண்ணா நினைவு தினம்.. சென்னையில் மவுன ஊர்வலம்! இந்த வழியா போகாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலை முதல் மெரினா வரை மவுன
ஊர்வலம் நடைபெறுவதால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக
சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது.
அண்ணா நினைவு நாளில் அமைதி பேரணியை திமுக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக
நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் இன்று இந்த பேரணி
நடைபெறுகிறது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அங்கு அண்ணாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவேன் என்று கூறியுள்ளார். அதாவது,

“ஸ்பெயின் நாட்டில் தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான
சந்திப்புகளும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு
கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெய்னில் என்றாலும், நினைப்பெல்லாம்
தமிழ்நாட்டில்தான். அண்ணா அவர்களின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி,
மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கம்.
இந்த முறை, கழக உடன்பிறப்புகளாம் உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை.
எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று
போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயாராது
உழைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா
முழுமைக்குமான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு தி.மு.கழகத்திற்கு
இருக்கிறது” என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் அண்ணாசாலை முதல் மெரினா வரை மவுன ஊர்வலம் நடைபெறுவதால்
இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து
காவல்துறை அறிவித்திருக்கிறது. இன்று காலை 8 மணி முதல் நிகழ்ச்சிகள்
நடைபெறும் வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
“அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள
அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு
மவுன ஊர்வலம் செல்ல உள்ளனர். எனவே மேற்படி சாலைகளில் போக்குவரத்து
தடையின்றி செல்ல சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் தேவைப்பட்டால் போர் நினைவிடத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி
வரும் வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாகவும், காந்தி சிலையிலிருந்து காமராஜர்
சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை
வழியாகவும் திருப்பி விடப்படும்.
மேலும், அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலையை நோக்கி ஊர்வலம் செல்லும்போது
அண்ணா சிலையிலிருந்து, பெரியார் சிலையை நோக்கி வாகனங்கள் திருப்பி
விடப்படும். வாலாஜா சாலை, அண்ணாசாலை, டேம்ஸ் ரோடு, பிளாக்கர்ஸ் சாலை
மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மெதுவாக இருக்கும்.
எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு இந்த சாலைகளை தவிர்த்து
மாற்று பாதையில் சென்று தங்களது இலக்கை அடையுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications