திணறும் சென்னை.. பொங்கலுக்கு சென்ற மக்கள் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக சென்னைக்கு வரும் பிரதான சாலையான பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திங்கள் கிழமை போகி பண்டிகையும், செவ்வாய் பொங்கல், புதன் திருவள்ளுவர் தினம், வியாழன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவே பலரும் சொந்த ஊர் புறப்பட்டனர். இதனால் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. விடுமுறைக்கு ஊருக்கு சென்ற மக்கள் தற்போது மீண்டும் சென்னை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இன்று இரவு சுமார் 8 மணி நிலவரப்படி சென்னை நுழைவு வாயில் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர்.
முன்னதாக சென்னையிலிருந்து சுமார் 8.73 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றதாக போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், "2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15.666 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், 17.01.2025 அன்று 28,022 பயணிகளும், 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த பயணிகள் அனைவரும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னைக்கு நுழையும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். புதிய சாலைகள், மேம்பாலங்கள், கூடுதல் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம் இந்த நெரிசலை ஓரளவுக்கு மட்டுமே கட்டுப்படுத்த முடியும். உண்மையில் பயணிகள் மீதும், மக்கள் மீதும் அக்கறை இருப்பின், மாவட்டம் தோறும் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
சென்னையில் மட்டுமே எல்லா தொழிற் நிறுவனங்களையும் குவிக்காமல், எல்லா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக தொழிற்துறைகள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications