தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு சென்னையில் இருந்து பேருந்துகள் புறப்பட தாமதம் ஏன்? வெளியான விளக்கம்
சென்னை: தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. தேர்தலையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 10,637 பேருந்துகளில் 6.25 லட்சம் பேர் பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தலையொட்டி, சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பல லட்சம் பேர் பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனால் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பஸ் கிடைக்காமல் பயணிகள் அலைமோதும் சூழல் ஏற்பட்டது.

பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும், திடீரென பயணத்தை திட்டமிட்டவர்களும் முந்தைய நாளான 22 ஆம் தேதி இரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். ஆனால், அங்கிருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். குழந்தைகள், பெண்கள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மறுநாள் காலை 9 மணிக்குப் பிறகே நிலைமை சீரடைந்தது.
தென் மாவட்டங்களுக்குச் சென்ற வாக்காளர்கள் பலர், வாக்குப்பதிவு நேரம் முடிவடைவதற்குள் ஊருக்குச் செல்ல முடியவில்லை. பல இடங்களிலும், 6 மணிக்கு மேல் சென்றதால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததே இந்த பிரச்சனைக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் கூறுகையில், "கடந்த 21 ஆம் தேதி வழக்கமான 2,092 பேருந்துகள், கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.89 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். 22 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை, வழக்கமான 3 ஆயிரம் பேருந்துகள், கூடுதலாக 4,206 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,206 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4.38 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், 21 ஆம் தேதி முதல் 23-ம் தேதி காலை 6 மணி வரை, மொத்தம் 10,637 பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.25 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். எனவே, பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
அதுதவிர, சென்னையில் இருந்து மதியம், மாலை நேரத்தில் விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவில் சென்னை திரும்பிவிடும். இந்த பேருந்துகள் இரவு மீண்டும் இயக்கப்படும். ஆனால், திட்டமிட்ட நேரத்துக்கு அந்த பேருந்துகள் செல்லாததால், சென்னை திரும்ப தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே இந்த தாமதத்துக்கு காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications