அரசு பஸ்ஸில் புக் பண்ணி போறீங்களா? செம ஆஃபர்.. குலுக்கல் பரிசு.. அள்ளி கொடுக்கும் போக்குவரத்து துறை
சென்னை: சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் புக் செய்து செல்லும் பயணிகளில் 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். அதன்படி ஜனவரி மாதத்திற்கான, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறைகளில் சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்கள் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், டிக்கெட் புக் செய்ய முடியாவிட்டாலும் அடுத்த தேர்வாக மக்கள் ஆம்னி பஸ்களில் செல்கின்றனர். இந்த நேரங்களில் ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் வில அதிகரிக்கப்படும். இதன் காரணமாக பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக போக்குவரத்து துறை பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ஆம்னி பஸ்சுகளுக்கு நிகரான சொகுசு வசதிகளை அரசு பேர்ந்துகளிலும் உள்ளது. இதே போல் வார நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் பயணிகள் அரசு பேருந்தில் செல்வதை தவிர்த்து சாதாரண நாட்களிலும் பயணிகள் கூட்டத்தை அதிகரிக்க செய்ய நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் வழியாக புக் செய்து செல்லும் பயணிகளில் 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான மூன்று வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தேர்வு செய்தார். கடந்த ஜனவரி மாதத்தில் சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் பயணித்தவர்களில் எஸ். இசக்கி முருகேசன், கே. சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய 3 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறபட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் மூன்று (3) பயணிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று (01.02.2024) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வலைதளமான https://www.tnstc.in, செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அது போன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 2024 மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை நடைமுறை படுத்தும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான மூன்று (3) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று (01.02.2024) தேர்வு செய்தார். அதன் விவரங்கள் கீழ்வருமாறு, ஜனவரி-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, எஸ். இசக்கி முருகேசன், கே. சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000/- விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications