அடடா.. தமிழக மக்களின் தலையில் ரூ.90 ஆயிரம் அரசு கடன்! திரும்ப செலுத்த பணம் அனுப்பிய திருச்சி நபர்!
சென்னை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் தமிழக அரசின் கடன் உள்ளது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த நபர் தன்மீது தமிழக அரசு வாங்கிய கடனை செலுத்த ரூ.90 ஆயிரத்தை தலைமை செயலகத்துக்கு அனுப்பி உள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலின்போது தமிழக அரசின் கடன் குறித்த விபரங்களை அவர் வெளியிட்டார்.
அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் மாநில அரசு 90,116.52 கோடி ரூபாய் அளவிற்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதில் சரக்குகள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு ஈடாக மத்திய அரசால் வழங்கப்பெறுமென எதிர்பார்க்கப்படும் 6,500.00 கோடி ரூபாய் அடங்காது என்றார்.

தமிழக அரசுக்கு ரூ.6.53 லட்சம் கோடி
மேலும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நிலுவைக் கடன், மத்திய அரசிடமிருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்கு மாறாக கடனாக பெறப்பட்ட தொகை நீங்கலாக 6,53,348.73 கோடி ரூபாயாக இருக்கும். இது, 2022-23 ஆம் ஆண்டு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 26.29 சதவீதமாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2023-24 ஆம் ஆண்டில் 26.24 சதவீதமாகவும், 2024-25 ஆம் ஆண்டில் 25.93 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

திருச்சி நபர்
அதன்படி தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் குறிப்பிட்ட அளவுக்கு கடன் சுமை உள்ளது. இந்நிலையில் தான் ஒருவர் தன்மீதான கடனை செலுத்தும் வகையில் தமிழக அரசுக்கு பணம் அனுப்பி உள்ளார். அதன் விபரம் வருமாறு: திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியாவில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஒவ்வொருவரின் மீதும் ரூ.90,558 கடன்
அந்த கடிதத்தில், ‛‛நான் சவுதிஅரேபியால் பணியாற்றுகிறேன். பொருளாதாரம் படிக்கிறேன். 2022-2023ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டின்போது தமிழக அரசின் கடன் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31ல் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது. 2011 மக்கள்தொகைப்படி தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேராகும். அதன்படி ஒவ்வொருவரின் மீதும் தமிழக அரசின் கடன் என்பது ரூ.90 ஆயிரத்து 558 ஆக உள்ளது. இதனால் வருத்தமடைந்து தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பை செய்கிறேன்'' எனக் கூறப்பட்டு இருந்தார்.

கடன் செலுத்த பணம் அனுப்பினார்
மேலும் தமிழக அரசின் கடனை செலுத்த இவர் ரூ.90 ஆயிரத்து 558யை அனுப்பி உள்ளார். இந்த தொகையை அவர் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛ ஒவ்வொரு தமிழரின் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் என்பது ரூ.90 ஆயிரத்து 558 என்பதாகும். கடந்த 6 மாதங்களாக சேமித்து இந்த பணத்தை அனுப்பி உள்ளேன். இந்த தொகையை பெற்று கொண்டு எனது கடனை தமிழக அரசு முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன். தமிழக முதல்வர் இந்த தொகையை கடன் செலுத்த பயன்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்'' என்றார்.

தமிழக அரசு நன்றி
இதையடுத்து தமிழக அரசு அதற்கான ரசீதை அவருக்கு அனுப்பி உள்ளது. மேலும் சின்னராஜா செல்லதுரைக்கு தமிழக நிதித்துறை இணைச் செயலாளர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நீங்கள் அனுப்பி வைத்த மதிப்புமிக்க பங்களிப்புக்கு நன்றி'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications