திருச்சியை வட்டமிடும் எடப்பாடி பழனிசாமி.. பிளான் இதுதான்.. துறையூரில் அதிமுக குஷி.. கவனிக்கும் திமுக
சென்னை: அதிமுக ஆட்சியில் வறட்சியின்போது விவசாயிகளுக்கு ரூ.2,400 கோடி நிவாரணம் வழங்கினோம். இந்தியாவிலேயே அதிக உணவு தானிய உற்பத்தியை பெருக்கி, தமிழகம் முதலிடம் வகித்ததற்கு அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையே காரணம். முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் குடும்ப சிந்தனைதான். வாக்களித்த மக்கள் மீது அவருக்கு அக்கறை கிடையாது, உடல் உறுப்பு திருட்டு தொடர்பாக அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்றைய கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.. இந்நிலையில் இன்றும் திருச்சி மணப்பாறையில் தன்னுடைய பிரச்சார உரையை நடத்த உள்ளார்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
திருச்சியில் எடப்பாடி பழனிசாமி
முதல்நாளான நேற்று முன்தினம் திருவெறும்பூர், காந்திமார்க்கெட் மரக்கடை, லால்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். 2-வது நாளான நேற்று காலை எடப்பாடி பழனிசாமி திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி பணிகள், சட்டமன்ற தேர்தல் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.. பிறகு, திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினார்.
இதையடுத்து, மாற்று கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். பிறகு மாலை 4 மணிக்கு மேல் ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்று மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய இடங்களில் பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
மண்ணச்சநல்லூர் பிரச்சாரம்
மண்ணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றியபோது திமுக அரசை கடுமையாக சாடினார்.. "காவிரி, பவானி, அமராவதி, நொய்யல் மற்றும் கிளை ஆறுகளில் வரும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழிவகை செய்தது அதிமுக அரசு.
மேலும், 40 லிட்டர் பால் தரும் வகையில் கலப்பின பசுக்களை உருவாக்கும் கால்நடை பூங்காவை சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடியில் அமைத்தோம். அந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அத்திட்டத்தை செயல்படுத்தி, கலப்பின பசுக்களை உருவாக்கி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவோம்.
திமுக அரசு ஏழைகளுக்காக ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்ததா? முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் தனது குடும்பத்தைப் பற்றிய சிந்தனைதான் உள்ளது. வாக்களித்த நாட்டு மக்களைப் பற்றி அவருக்கு அக்கறை கிடையாது. தொழிலாளி, விவசாயி, மாணவர் என ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிமுக ஆட்சியில் பலன் கிடைத்தது. ஆனால், தற்போது கருணாநிதி குடும்பம் தான் பிழைக்கிறது" என்று பேசினார்.
இந்தநிலையில் 3-வது நாளான இன்று திங்கட்கிழமை காலை எடப்பாடி பழனிசாமி விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பிறகு மாலை 4 மணி அளவில் மணப்பாறையில் பிரச்சாரத்தை துவங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு திருச்சி மேற்கு தொகுதியில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 7 மணிஅளவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பும் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி திருச்சியில் 3 நாட்கள் பிரசாரம் செய்ததையொட்டி அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து திமுகவுக்கு எதிரான தேர்தல் பணிகளில் ஜரூராக களமிறங்க திருச்சி அதிமுக தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications