தாமதமாகும் விஜய் வருகை.. தண்ணீர் இல்லாமல் குழந்தைகளுடன் தவிக்கும் தொண்டர்கள்
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும், ரசிகர்களும் விஜயைக் காண்பதற்காக குவிந்துள்ளதால் திருச்சி நகரமே ஸ்தம்பித்துள்ளது. விஜயின் பிரச்சார வாகனத்தைச் சுற்றிலும் தொண்டர்கள் சூழ்ந்ததால் இன்ச் இன்சாக வாகனம் நகர்ந்து கொண்டு வருவதால் விஜயின் பிரச்சாரம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 10:30 மணிக்கு விஜயின் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்ற நிலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகி வருவதால் தொண்டர்கள் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருச்சியில் இன்று தொடங்கியுள்ளார். தவெக பிரச்சாரத்துக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. விஜய் தனி விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குவிந்த ரசிகர்கள்
விமான நிலைய வளாகத்துக்குள் ரசிகர்கள் வராமல் இருக்கும் வகையில், காவல் துறை சார்பில் அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த தடுப்புகளை எல்லாம் உடைத்துவிட்டு ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காகச் சென்றனர். இதனால், காவல் துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயின் பேச்சை கேட்பதற்காகவும், அவரைக் காண்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் திருச்சியில் குவிந்துள்ளதால் திருச்சி மாநகரமே ஸ்தம்பித்துள்ளது.
தாமதமாகும் பிரச்சாரம்
திருச்சி விமான நிலையம் முதல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை தொண்டர்கள் பலரும் திரண்டுள்ளனர். வீடுகள், சுவர்கள், கட்டடங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் மேல் விஜய் கட்சியினர் ஏறி நின்று விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். காலையில் நடக்க வேண்டிய பிரச்சாரம் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இன்ச் இன்ச்சாக நகரும் விஜய் வாகனம்
ஏராளமான தொண்டர்கள் விஜயின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்ததால் இன்ச் இன்ச்சாக பிரச்சார வாகனம் சென்று கொண்டிருக்கிறது. 10:30 மணிக்கு விஜயின் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தொண்டர்கள் சூழ்ந்ததால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலானது.
அதேசமயம், விஜயின் வாகனத்தை 5 வாகனங்கள் தான் பின்தொடர வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து செல்கின்றன. திருச்சியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. காலையில் நடக்க வேண்டிய பொதுக் கூட்டம் தொடர்ந்து தாமதமாகி மதிய வேளையை நெருங்கி விட்டது.
தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தொண்டர்கள்
பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், குழந்தைகளுடன் சிறுவர்களுடன் பெண்கள், பெரியவர்கள் என பலரும் வந்துள்ளனர். தொடர்ந்து தாமதமாகி வருவதால் தண்ணீர் கூட இல்லாமல் தொண்டர்கள், ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.
கடும் வெயில் காரணமாக சிலர் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரச்சாரம் நடக்கும் பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் உணவு, குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திருச்சியில் குவிந்துள்ள நிலையில், தொண்டர்கள புடைசூழ விஜய் பிரச்சார வாகனம் ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதியான மரக்கடை பகுதிக்கு விஜய் வர 3 கிலோ மீட்டர் உள்ள நிலையில், கூடுதல் நேரமாகும் என்று கருதப்படுகிறது. வெயிலையும், கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் விஜயைப் பார்ப்பதற்காகவும், அவரது பேச்சை கேட்பதற்காகவும் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications