திருச்சியில் பிரம்மாண்ட வேளாண் சங்கமம்! ஜூலை 27 முதல் 29 வரை! விவசாயிகளுக்கு அரசு அழைப்பு!
சென்னை: ஜூலை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்) நடைபெறுகிறது.
வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது மாநில வேளாண் கண்காட்சி திருச்சியிலும், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. அதேபோல் வேளாண் வணிகத் திருவிழாவும் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ரூபாய் ரூ.2.5 கோடி மதிப்பிலான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்) நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
அதில், திருச்சி வேளாண் கண்காட்சியில் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் எனவும், அனைத்து வேளாண் இயந்திரங்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், விவசாயிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் இயந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்களும் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications