வெள்ளை மாளிகையில் டிரம்ப் ! சீனாவுக்கு செக்? இந்தியாவுக்கு லாபமா? நஷ்டமா?
சென்னை: அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வந்துள்ள நிலையில், அதனால் இந்தியப் பொருளாதாரம் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஒரு கருத்தைச் சர்வதேச ஊடகங்கள் அலசி ஆராய்ந்து எடுத்துக் கூறிவருகின்றனர்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அடி எடுத்து வைத்துள்ளார். இவர் வெற்றி பெறவேண்டும் என வடமாநிலங்களில் உள்ள இந்தியர்கள் யாகம் நடத்தி செய்திகள் கூட வெளியாகின. ஆனால், கடந்த காலங்களில் பொருளாதாரம் சார்ந்து டிரம்ப் எடுத்த போர்க்கால நடவடிக்கைகள் அதிகம் இந்தியாவைப் பாதிக்கவே செய்தன. அப்படி இருந்தும் இந்தியாவில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவு அளித்தது ஆச்சரியம்தான்.

அவர் வெற்றி பெற்ற உடனேயே ஆற்றிய உரையில் பைபிள் புத்தகம் மிக முக்கியமானது என்றும் மத நம்பிக்கை கட்டாயம் தேவையானது என்று பேசியதும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. டிரம்ப் பழையபடி தனது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. இவரது வருகையால் இந்தியாவுக்குப் பாதிப்புகள் எழுமா? என்ற கேள்வியும் கேட்க தொடங்கி இருக்கிறது.
டிரம்ப் 2.0 ஆட்சியில் இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் சில பாதிப்புகளைச் சந்திக்கும் என்றே சொல்லப்படுகிறது. எலாரா செக்யூரிட்டிஸ் அறிக்கையின்படி இந்தியாவைப் பொறுத்தவரை, ஐடி துறை, மருந்து உற்பத்தி, ஈஎம்எஸ், பாதுகாப்புத் துறைகளில் ஆகியவற்றில் பாதிப்புகள் நேரடியாக இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் தொடர் சரிவுகள் நிலவி வருகின்றன. அதன் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கணித்துக் கூறப்பட்டுள்ளது. H-1B விசாக்கள் வழங்குவதில் டிரம்ப் சில கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறார். அதை அவர் பிரச்சாரத்தில் ஒரு கொள்கையாகவே முன்வைத்தார். சட்டவிரோத குடியேற்றத்தின் மீது அவரது இரும்புக் கரம் பாய உள்ளது. இந்தியர்களை அதுவும் குறிப்பாகக் குஜராத் மக்களை அதிகம் பாதிப்பாக இருக்கப் போகிறது. விசாக்களின் கட்டணத்தையும் அவர் பல மடங்கு உயர்த்தக்கூடும் என்றும் ஒரு வாதம் எழுந்துள்ளது. அதனால் இந்தியர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவர்.
டொனால்ட் டிரம்ப் அனைத்து இறக்குமதிகள் மீதும் 20% வரி விதிக்கவும், கார்கள் மீது 200%க்கும் அதிகமான வரி விதிக்கவும் கூடும் என்று தெரியவருகிறது. அவர் அமெரிக்க பட்ஜெட்டில் பற்றாக்குறைகள் இருந்தாலும் தனது குடிமக்கள் மீதான வரிச் சலுகையை நீடிக்க முடிவு செய்துள்ளார். அந்த இடைவெளியை அவர் இதன் மூலம் சரிக்கட்டலாம். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு செனட் சபையில் பெரும்பான்மை இருக்கிறது. பிரதிநிதிகள் சபையிலும் அவரது கட்சி முன்னணியில் இருக்கிறது.
ஆகவே, அவரது கைகள் சுதந்தரமாக செயல்பட முடியும். அவரைக் கட்டுப்படுத்தும் சக்தி பலம் இல்லாமல் மாறியுள்ளது. டொனால்ட் டிரம்ப் அவரது 2016-2020பதவி காலத்துக்குப் பின் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது அமெரிக்கப் பங்குகளுக்குச் சாதகமானது என்று எலாரா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
டிரம்ப் கார்பரேட் மீதான வரி குறைக்க உள்ளார். 21% இருந்து 15% ஆக அது குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அவர் தெரிவித்திருந்தார். இதனால் அமெரிக்கப் பங்கு விலைகள் அதிகரிக்கலாம். கார்ப்பரேட் வரிக் குறைப்பு, மேம்பட்ட லாபம் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றால் பங்குகளின் விலை உயர்ந்தால் அது அமெரிக்கப் பங்குச் சந்தையை ஊக்குவிக்கும். இதில் இந்தியாவுக்குச் சாதகமான அம்சமாக இருநாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்படும் என்ற நம்பிக்கை கூடி இருக்கிறது. அதேசமயம் அந்நியச் செலவாணி சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவக்கூடும் என்றும் சொல்கிறார்கள். டிரம்ப் வருகையால் உலக பங்குச் சந்தை சில நெருக்கடியைச் சந்திக்கலாம். அதனால், இந்தியப் பங்குச் சந்தை சில லாபங்கள் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.
மோடி எப்படி 'மேக் இன் இண்டியா’ என்றாரோ அதே மாதிரி டிரம்ப், 'மேக் இன் அமெரிக்கா’ என்ற கொள்கை முடிவை ஊக்குவிக்க இருக்கிறார். அதனால் இந்திய உற்பத்திப் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படலாம். இது ஒரு சவாலை உருவாக்கும். இதன் தாக்கம் இந்திய உற்பத்தியாளர்களைப் பாதிக்கும். ஆனாலும், டிரம்பின் சீன எதிர்ப்பு நிலைப்பாடு இந்தியாவைப் பலனடையச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனிகள் மீதான வரிக் குறைப்பு அந்த நாட்டிலுள்ள ஐடி துறை செலவினங்களை ஊக்கப்படுத்தலாம் என்றும், இது இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் பலனளிக்கும் என்றும் எலாரா செக்யூரிட்டீஸ் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் டிரம்பின் சீன எதிர்ப்பு கொள்கை இந்திய மருந்து நிறுவனங்களுக்கும் பலன் தரும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்சினைகளில் இந்தியாவுடன் அதிக ஒத்துழைப்பு அமெரிக்கா அளிக்கும் என நம்பப்படுகிறது. இது பாதுகாப்பு தொடர்பான கூட்டாண்மையை ஊக்குவிக்கும். ஆகவே பாதுகாப்புத் துறைக்கு இது பயனளிக்கலாம்.
எலாரா செக்யூரிட்டிஸின் பகுப்பாய்வின்படி, சீனா மீது வரிகள் அதிகரித்தால், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்கிறது. அதாவது ஜவுளி துறை, தையல் நூல் மற்றும் துணிகள் , ஆயத்த ஆடைகள், மோட்டர் என்ஜின்கள், போக்குவரத்து சார்ந்த உபகரணங்கள், இரும்பு, எஃகு, கிரானைட்டு போன்ற பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது, இது சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகமாகும்.
சீனா மீது வரி விதிக்கப்பட்டால், இது சீர்குலைந்து நிச்சயமற்ற நிலை அடையலாம். ஒருவேளை சீனப் பொருளாதாரம் மீளத் தவறினால் அல்லது அதன் உள்நாட்டுத் தேவை மேம்படவில்லை என்றால், சீனாவிலிருந்து அதிக அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று எலாரா அறிக்கை கூறியுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பு 75 பில்லியன் டாலர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் மிகப்பெரியது. ஏறத்தாழ 120 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இது சீனாவை விட அதிகம்.












Click it and Unblock the Notifications