குண்டுமணி தங்கமாவது வாங்கி வச்சுக்கங்க! இனிமே நம்மளால நினைச்சு கூட பார்க்க முடியாது! என்னாச்சு?
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிரான வரிவிதிப்பு நடவடிக்கையை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நேரடி தாக்கம் இந்தியாவின் பொருளாதாரம், நாணய மதிப்பு, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஏறக்குறைய 75 ஆயிரம் என்ற நிலையை தங்கம் எட்டி இருக்கும் நிலையில், விரைவில் 80 ஆயிரம் ரூபாயை தொடலாம் எனவும், சில மாதங்களிலேயே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் என்ற நிலையை எட்டும் என்கின்றனர்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப். பதவியேற்றதிலிருந்து இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை சீண்டி வருவது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல்வேறு நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதிப்பை அறிமுகப்படுத்துவேன் என கூறி அதிர வைத்தார்.
குறிப்பாக சீனா, கனடா, மெக்ஸிகோ இந்தியா உள்ளிட்ட நாடுகள் 100% அளவுக்கு வரி விதிக்கும் நிலையில் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் அதே அளவு வரி விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் எவ்வளவு வரி இருக்கிறதோ அதே அளவு வரியை நாங்களும் இருப்போம் என்றதோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கும் தனிப்பட்ட தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த வரிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்த அறிவிப்புக்கு பின்னர், இந்தியாவில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை மட்டும் ரூ.1,600 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்தியாவின் தங்கத்தின் விலை சுமார் 2% அதிகரித்துள்ளது. பொருளாதார நிலைத்தன்மை குறையும்போது, பொதுமக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேடும் பழக்கத்தால் இந்த உயர்வு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
டொனல்ட் டிரம்பின் இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியா தற்போது ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்த எண்ணெய்க்கு அமெரிக்கா தண்டம் விதிக்க முனைந்திருப்பது, உலக சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தி, Indian Oil, HP, BPCL போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவை மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, நகை , மருந்துகள், மின் உபகரணங்கள் போன்ற துறைகளும் நேரடி தாக்கத்தை எதிர்கொள்வதால், உள்நாட்டு வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்படலாம். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சற்று மந்தமாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், வர்த்தக உறவில் பதட்டம் ஏற்படுவது, ரூபாயின் மதிப்பை கீழே தள்ளியுள்ளதால், பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதே நேரத்தில் இந்திய அரசு எச்சரிக்கையாக செயல்பட்டு வருவதாகவும், அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தகத் தீர்வு விரைவில் எட்டப்படும் என இந்திய பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எது எப்படி எனினும் வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. தற்போது ஏறக்குறைய 75 ஆயிரம் என்ற நிலையை தங்கம் எட்டி இருக்கும் நிலையில், விரைவில் 80 ஆயிரம் ரூபாயை தொடலாம் எனவும், சில மாதங்களிலேயே ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் என்ற நிலையை எட்டும் என்கின்றனர். தற்போதைக்கு பாதுகாப்பான முதலீடு தங்கம் தான் என்பதால் நடுத்தர மக்களின் கவனம் அதை நோக்கியே இருக்கிறது.












Click it and Unblock the Notifications