ஐயோ பாவம்.. தேமுதிக நிலையை பாருங்க.. பிரேமலதா பிரச்சாரத்திற்கு சொந்த வாகனம் கூட இல்லை! உதவிய தினகரன்
சென்னை: 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற கட்சி தேமுதிக. அதன் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற அந்த தேர்தலில், திமுக பிரதான எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலைமைக்கு சென்றது. அப்போதுதான் இந்த விஸ்வரூப எழுச்சி பெற்றது தேமுதிக.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது, நிழல் முதல்வர் பதவியை போன்றது. கேபினட் அந்தஸ்து கொண்டது. இத்தனை சிறப்புமிக்க பதவியை அலங்கரித்தார் விஜயகாந்த்.

பிரச்சாரத்திற்கு வாகனம்
இப்போது பாருங்கள்.. தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு கூட சொந்த வாகனம் இல்லாமல் அதே விஜயகாந்த் மனைவி பிரேமலதா, டிடிவி தினகரனிடம், பிரசார வாகனத்தை பெற்றுள்ளார். இதை அறிந்த தேமுதிக தொண்டர்கள் பதைபதைத்துப் போய் இருக்கிறார்கள். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரச்சார வேன், தினகரனால், பிரேமலதா விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில்தான் விருத்தாசலம் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அமமுகவுடந் கூட்டணி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து உள்ளது. 60 தொகுதிகள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் வட தமிழகத்தில் அமைந்துள்ள தொகுதிகள் மற்றும் தனி தொகுதிகள் . தென் தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செல்வாக்கு பெற்று இருப்பதாக நினைக்கிறது. எனவே அங்கு அதிகமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டி போடுகிறது. வட தமிழகத்தில் தேமுதிக பலமாக இருக்கக் கூடியதாக நினைக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

20 லட்சம் ரூபாய் வேன்
இந்த நிலையில்தான், டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணியில் இணைந்ததற்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தார். அத்தோடு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரச்சார வேனை பிரேமலதா விஜயகாந்த்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சொந்த கட்சி வாகனம் தேவை
தங்கள் கூட்டணி நட்பை வெளிப்படுத்தும் வகையில் வேன் வழங்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெரிவித்தாலும் கூட .. சொந்தமாக ஒரு கட்சியை வைத்து நடத்தி வரும் தலைவர், தங்களது சொந்த பணத்தில் பிரசார வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.. இன்னொரு கட்சி கொடுக்கும் பிரச்சார வாகனத்தை பயன்படுத்துவது மனரீதியாக அந்த கட்சி தொண்டர்களை சோர்வாக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

விஜயகாந்த்துக்கு சொன்னீர்களா
மேலும் பிரதான எதிர்கட்சி அந்தஸ்து வரை வந்த தேமுதிக, ஒரு பிரச்சார வாகனம் வாங்க முடியாத அளவுக்கு நிதி நிலைமையில் மோசமாக இருக்கிறதா. இப்படி இருக்க கூடிய ஒரு கட்சி தனித்துப் போட்டியிடுவோம்.. அல்லது அதிக சீட்டுகள் தரவேண்டும் என்று அதிமுகவிடம் எப்படி நெருக்கடி தர முடிந்தது.. அல்லது தங்களிடம் நிதி இருந்தாலும் சும்மா வரும் வாகனத்தை ஏன் விடுவானேன் என்று வாங்கிப்போட்டு கொண்டார்களா.. இது விஜயகாந்துக்கு தெரியுமா.. என்றெல்லாம் தேமுதிக தொண்டர்கள் பலரும் மனம் வெந்து போய் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது. தன்மானத்தை விட்டுக் கொடுக்க கூடாது என முழங்கியவர் விஜயகாந்த். ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேர் நாக்கை துருத்தியவர். ஆனால், அவர் எப்படி இப்படி பிற கட்சியிடமிருந்து பிரச்சார வாகனம் வாங்க சம்மதித்திருப்பார். அவரிடம் இந்த தகவல் பகிரப்பட்டதா என்பதே தொண்டர்கள் கேள்வி.












Click it and Unblock the Notifications