அண்ணாமலை சொன்னதுல தப்பே இல்லை.. ஜெயலலிதாவே இப்படி கூறியுள்ளார்.. சப்போர்ட்டாக வந்த டிடிவி தினகரன்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை, ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக இருந்தார் ஜெயலலிதா என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி, கடந்த முறை தேர்தல் முடிந்த பிறகு கேதார்நாத் சென்றார். இந்தமுறை தமிழகம் வருகிறார். இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது இல்லை. விவேகானந்தர் இல்லத்தில் பிரதமர் தவம் இருப்பதால் வாக்காளர்களை எந்த விதத்தில் பாதிக்கும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணியினர் மோடியைக் கண்டு பயப்படுகிறார்கள். மோடியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எதிராக பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.

டிடிவி தினகரன் பேட்டி: அரசியலுக்காக திமுகவினர் சிறுபான்மையினரின் காவலர்கள் என காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டில் கோவிலுக்கு சென்று பூஜை செய்கிறார்கள். இதுபோன்ற மலிவான அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் தியானம் செய்வதினால் என்ன பாதிப்பு ஏற்பட போகிறது. அது நல்ல விஷயம் தானே?" எனத் தெரிவித்துள்ளார்.
மதவெறி பிடித்த யானையை விட கொடூரமானது பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "பாஜக கூட்டணியில் இருந்த போது இது அவருக்கு தெரியவில்லையா? இவர்கள் வெளியே வந்ததும் அவர்களுக்கு மதம் பிடித்துவிட்டதா" என பதில் அளித்தார்.
அண்ணாமலை சொன்னதில் தவறில்லை: மேலும் பேசிய டிடிவி தினகரன், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்னதில் தவறில்லை. இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. அதேபோல் 1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா எம்பியாக இருந்தபோது காஷ்மீருக்கு 370 வது பிரிவு வேண்டாம் என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் கட்டுவதற்கு பாகிஸ்தானிலா கட்ட முடியும்? இங்குதான் கட்டமுடியும் என பேசி ஆதரவாக இருந்தார். ஜெயலலிதா தெய்வ பக்தி மிக்கவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்ற மதத்தையும் மதிப்பார்கள். ஜெயலலிதா தான் இந்து என்பதை அவரே சொல்லியுள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியலுக்காக ஏதாவது சொல்லி வருகிறார்கள." எனத் தெரிவித்தார்.
எங்கும் போதை: தொடர்ந்து பேசிய தினகரன், "தமிழகத்தில் போதைப்பொருள் அதிக அளவில் பரவி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை பொருட்களை பயன்படுத்துவதினால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போதைப்பொருள் கலாச்சாரத்தை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இளைஞர்களையும் மாணவர்களின் குறி வைத்துபோதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை எல்லாம் தடுத்து எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்கின்ற முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டும். அதை விட்டு விட்டு குஜராத்தில் இருந்து வருகிறது அதனால் இங்கே தடுக்க மாட்டோம் எனச் சொல்வது நியாயம் இல்லை. தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வந்தால் தான் தீர்க்க முடியும். ராகுல் காந்தி வந்தால் நாடு சோமாலியாவாக மாறிவிடும்." எனக் கூறியுள்ளார்.
மேலும், "ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் பழனிசாமி போன்றவர்கள் பதவி சுயநலம் வெறி பணத்திமிர் அதிகார திமிரில் ஆட்டம் போடுகிறார்கள். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து வருவார்கள். ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார் தினகரன்.












Click it and Unblock the Notifications