வாழ்க்கையே போராட்டம் ஆயிடுச்சு..அழிக்க நினைப்பது நியாயமா? கேன்சல் பண்ணனும்.. டிடிவி தினகரன் காட்டம்!
சென்னை: வாழ்வாதாரத்தை காக்க போராடும் பரந்தூர் பகுதி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிள்ளார்.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்: இந்நிலையில் ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போரட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
டிடிவி தினகரன்: இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமானநிலையத்திற்காக திரும்பெரும்புதூர் தாலுக்காவில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திமுக அரசு: மக்களின் பெயரில் நிறைவேற்றப்படும் அரசுத் திட்டங்களை நிராகரிக்கவும், அதனை எதிர்த்துப் போராடவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையை தொடர்ந்து மறுப்பதோடு, போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்காமல் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசின் மக்கள் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் அறிக்கை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் 43வதாக இடம்பெற்றிருக்கும் ”விவசாயிகளின் ஒப்புதலின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்து நிறுத்தி விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்” என்ற வாக்குறுதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, விளை நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அதனை அழிக்க மும்முரம் காட்டுவது எந்தவகையில் நியாயம் ?
அவசரகதி: உணவுப் பாதுகாப்பு, நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது இன்றைய தலையாய கடமையாக இருக்கும் சூழலில், பரந்தூர் விமானநிலையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை கூட இன்னமும் வெளிவராத சூழலில் அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்த முற்படுவது ஏன் ?
செவிசாய்க்க வேண்டும்: எனவே, மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதை இனியாவது உணர்ந்து பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்புகளை மீறி வெளியாகியிருக்கும் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications