சாட்டையை சுழற்றும் போலீஸ்! தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு! ஒரே வாரத்தில் 3வது "அட்டாக்"
சமீபத்தில்தான் கோவையில் போலீசார் இதேபோல் துப்பாக்கி சூடு நடத்தினர்.
சென்னை: தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே இருக்கும் சோரீஸ்புரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
வழக்கறிஞர் முத்துக்குமாரை அவரின் நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொலை
வழக்கு ஒன்றில் ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கொலை வழக்கில் முக்கிய நபரான ரமேஷ் என்பவர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து சுற்றி வந்தார். கடைசியில் அவரும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்.

கைது
மேலும் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்தான் முக்கிய குற்றவாளியான ஜெய்பிரகாஷை போலீசார் தேடி வந்தனர். வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் தேடப்பட்டு வந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர்தான் இந்த கொலைக்கு பின் இருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்ய முயலும் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்ப ஓட முயற்சி செய்த போது அவர் காலின் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த ஒரு வாரத்தில் 3 முறையாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகளை பிடித்துள்ளனர்.

தொடர் சம்பவம்
சமீபத்தில்தான் கோவையில் போலீசார் இதேபோல் துப்பாக்கி சூடு நடத்தினர். கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி சஞ்சய் ராஜா. இவர் கரட்டுமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். ரவுடியான இவர் பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, தாக்குதல், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார். அங்கே இருக்கும் சில அரசியல் தலைகளின் தயவால் போலீசார் இவர் வளர்ந்த போதே அடக்கி ஒடுக்காமல் இருந்துள்ளனர். இந்தநிலையில்தான் துளிர்விட்டு போன சஞ்சய் தனது ரவுடித்தனத்தை பொதுமக்களிடமும் காட்ட தொடங்கி உள்ளார். கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்த இன்னொரு ரவுடி சத்யா என்னும் சத்யபாண்டி. இவரின் கேங்கிற்கும் சஞ்சய் கேங்கிற்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த கேங் வார் முற்றவே இரண்டு தரப்பும் மாறி மாறி கடந்த 12ம் தேதி அடித்துக்கொண்டது. நடுரோட்டில் சத்யாவை சஞ்சய் வெட்டி கொலை செய்துள்ளார். அதோடு சத்யாவை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். அவரிடம் சீன துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்துதான் சஞ்சய் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவம்
இதையடுத்து கைது செய்யப்பட்ட சஞ்சயை போலீசார் சம்பவ இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதோடு அவரின் சீன துப்பாக்கிகளையும் வீட்டில் சென்று பறிமுதல் செய்தனர். துப்பாக்கியை வாங்கிவிட்டு திரும்பி வருகையில் சஞ்சய் தப்பி ஓட முயன்று உள்ளார். முக்கியமாக போலீசாரை அடித்து தள்ளிவிட்டு விலங்கோடு தப்பியோட முயன்று உள்ளார். இதையடுத்து போலீசார் அவரின் காலில் சுட்டு அவரை பிடித்தனர். அவரின் இடதுகாலில் சுட்டு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் நேற்று பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்ற நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். காலில் சுட்டு அவரை கைது செய்து இருக்கின்றனர். அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது போலீசார் அவரை சுட்டுப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications