தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி! ஆலோசனை சொன்ன தவெக நிர்வாகிகள்! விஜய் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என விஜய்யிடம், தவெக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் அதற்கு விஜய் என்ன சொன்னார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் வி. சாலையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் அடுத்த வாரமான இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்காக நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூருக்கு நிர்வாகியின் காரில் விஜய் வந்திருந்தார். அப்போது அங்கிருந்தவர்களை பார்த்து அவர் கையசைத்தார். பிறகு செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு உள்ளே சென்ற அவரை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, ஆளுநர் பதவியை அகற்றுவது, நீட் தேர்வை ரத்து செய்வது, பரந்தூர் விமான நிலையத்தை எதிர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது போல் விஜய் மாநில நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் அவர்களுடன் 5 நிமிடங்கள் தனித்தனியாக வரவழைத்து பேசினார். அப்போது விஜய், இந்த மாநாடு வெற்றி அடைந்ததற்கு காரணமே நிர்வாகிகளும் தொண்டர்களும்தான். நீங்கள் இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை என கூறி நெகிழ்ந்தாராம். மேலும் தவெக மாநாட்டில் ஏதாவது குறைகள் இருந்தால் அதையும் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொண்டாராம். ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு தெரிந்த குறைகளை கூறினராம்.
அதற்கு விஜய், அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக் கூட்டங்களில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றாராம். மேலும் விஜய்யிடம் 5 நிமிடங்கள் தனியே பேசிய நிர்வாகிகள் தனித்து போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டனராம். அதற்கு விஜய் புன்னகையித்தபடியே இருந்தாராம். ஆம் என்றும் சொல்லவில்லையாம், இல்லை என்றும் மறுக்கவில்லையாம். அதுபோல் விஜய்யுடன் தனியாக பேசிய அனைத்து நிர்வாகிகளும் வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள் (விஜய்) எங்கள் தொகுதியில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனராம்.
அதற்கும் புன்னகைத்த விஜய், போட்டியிடுவது குறித்து பிறகு பேசுவோம் என்றாராம். தவெக மாநாட்டில், கடைசியாக பேசிய போது விஜய், நம்முடன் எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம், ஆட்சியில் பங்கு தருவோம் என அறிவித்திருந்தார். ஏற்கெனவே தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என பல்வேறு கட்சிகள் கேட்டு வரும் நிலையில் விஜய் இது போல் அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
அது போல் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே இது போல் அறிவிப்பது தவெகவின் பலவீனத்தை காட்டுவதாக விசிக எம்பி ரவிக்குமார் சாடியிருந்தார். அது போல் சீமானும், ஆட்சியில் பங்கு கொடுப்பது நல்லவிஷயம்தான். ஆனால் அதை விஜய் இப்போதே கூற கூடாது. அவர் தனித்து போட்டியிட்டு அவருக்கென செல்வாக்கையும் வாக்கு சதவீதத்தையும் நிரூபித்துவிட்டுதான் இதை சொல்ல வேண்டும்.
இவருடைய வாக்கு சதவீதம் எத்தனை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால்தானே மற்ற கட்சிகள் தவெகவுடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். போட்டியிடும் போதே கூட்டணி என்றால் தவெகவின் செல்வாக்கு என்ன என்பது தெரியாமலேயே போய்விடும் என சீமான் அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications