தவெக நிர்வாகிகள் தலைமைய கேட்காம போகக்கூடாது.. தேர்தல் நேரத்தில் கட்டுப்பாட்டு.. பின்னணி இதுதான்!
சென்னை: "கட்சித் தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, தவெக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது," என அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் திணறுவது விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் கட்சித் தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நிர்வாகிகளால் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக, தவெக தலைமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து பொதுச்செயலாளர் என் ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.
முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பலர் டிவி விவாதங்களில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில நேரங்களில் தவெக நிர்வாகிகள் திணறுவது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அண்மையில் முன்னணி ஊடகம் ஒன்றில் நடந்த விவாத நிகழ்வில், காரைக்கால் பற்றிய பேச்சு வந்தபோது தவெக நிர்வாகி, அது புதுச்சேரி என்பதை உணராமல் பதில் சொல்லி இருந்தது கிண்டலுக்கு உள்ளானது.
இந்நிலையில் தான், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தவெக நிர்வாகிகள் ஊடக விவாத நிகழ்வுகளில் தவெக சார்பில் பங்கு பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications