SIR: அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! தவெக அறிவிப்பு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திமுக, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தற்போது தவெக அறிவித்திருக்கிறது.
SIR நடவடிக்கை மூலம் பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று திமுக விமர்சித்து வருகிறது. மறுபுறம் இந்த நடவடிக்கையை அதிமுக ஆதரித்திருக்கிறது. இந்நிலையில் தவெக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது கவனம் பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல், புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கவதுதான் இந்த SIR. மேற்பார்வையாக இது ஓகேவாகத்தான் தோன்றும். ஆனால் பீகாரில் SIR மேற்கொள்ளப்பட்டபோது பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டது. அதாவது, பாட்னா போன்ற நகரங்களில் ஆதார் அட்டைகள் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதுவே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதிகளில் ஆதார் அட்டையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இஸ்லாமிய வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
மட்டுமல்லாது SIR நடவடிக்கை முடிந்த பின்னர் புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பழைய பட்டியலுக்கும், புதிய பட்டியலுக்கும் இடையில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்கள், வெவ்வேறு முகவரியில் இருக்கும் ஒரே நபர்கள் ஆகியவர்களை நாங்கள் நீக்கினோம் என்று ஆணையம் விளக்கமளித்திருந்தாலும், 5 ஆண்டுகளில் எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க முடியும்? என்று கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருந்தன.
இப்படி இருக்கையில் பீகாரை போல தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. புதியதாக வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் நிறுத்தப்பட்டிருக்கிறது. நவ.4ம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு பணியும், டிச.9ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், 2026ம் ஆண்டு பிப்.7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தொடக்கம் முதல் SIR நடவடிக்கையை எதிர்த்து வரும் திமுக, இது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்திருக்கிறது. இன்று இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழக வெற்றிக் கழகமும் ஒன்று. திமுக நிர்வாகிகள், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர். ஆனால், இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தவெக அறிவித்திருக்கிறது.
முன்னதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த SIR நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதேபோல இக்கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications