17 நாளுக்கு பிறகு.. பனையூர் அலுவலகத்துக்குள் நுழைந்த புஸ்ஸி ஆனந்த்.. ஆலோசனையின் பின்னணி
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27 ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதியழகன் கைது செய்யப்பட்டார்.

புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஆனால் இருவரும் சிக்கவில்லை. இதற்கிடையே தான் நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி குழுவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் வெளியே வந்தனர். 16 நாள் தலைமறைவுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தனர். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் விஜயை, புஸ்ஸி ஆனந்த் இன்று மதியம் சந்தித்து பேசினார். இருவரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர்.
இந்நிலையில் தான் புஸ்ஸி ஆனந்த் 17 நாட்களுக்கு பிறகு இன்று பனையூரில் தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். முகத்தில் தாடி வளர்த்திருந்தார். அவரை நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அலுவலகத்துக்குள் புஸ்ஸி ஆனந்த் நுழைந்ததும் கதவு மூடப்பட்டது. அதன்பிறகு அவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நடிகர் விஜய் விரைவில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திக்கிறார். இதற்காக அனைவரையும் கரூருக்கு அழைத்து செல்லும் வகையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications