காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது: சோடங்கர்
சென்னை: அரசியலில் நீங்கள் எல்லோருடனும் பேசத்தான் வேண்டும்; எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது.. என்று தனியார் ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் திமுக கூட்டணி மோதல் தொடர்பாக , 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார். அதன் முக்கியப் பகுதிகள்:

திமுக தனது கூட்டணிக் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. காங்கிரஸிற்கு அழைப்பு வந்துவிட்டதா?
இல்லை, இதுவரை எங்களுக்கு முறைப்படி அழைப்பு வரவில்லை. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்காகக் காத்திருக்கிறோம்.
காங்கிரஸின் கோரிக்கைகள் என்ன?
பேச்சுவார்த்தை தொடங்கும் போது அதைத் தெரிவிப்போம். நாங்கள் என்ன கேட்கிறோம், அவர்கள் என்ன தருகிறார்கள் என்பது அப்போது தெளிவாகத் தெரியும்.
அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முன்பே நீங்கள் கனிமொழியைச் சந்தித்தீர்களே?
கூட்டணிக்குள் சுமூகமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சந்திப்புகள் நடக்கின்றன. எங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து அவரிடம் ஆலோசித்தோம்.
வேணுகோபால் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பில் என்ன நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்தச் சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதே சமயம், ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பகிர்வுக்கு திமுக சம்மதித்துள்ளதா?
ஆம், வேணுகோபால் முதலமைச்சரைச் சந்தித்தபோது, இதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தெரிந்தது. கொள்கையளவில் அவர்கள் சம்மதித்துள்ளனர்.
மாநில அளவில் (அமைச்சரவையில்) அதிகாரப் பகிர்வு கேட்கிறீர்களா?
அதிகாரம் வேண்டாம் என்று எந்தக் கட்சி சொல்லும்? நாங்கள் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம், தொண்டு நிறுவனத்தை அல்ல. ஆனால் தமிழகத்தில் அத்தகைய கலாச்சாரம் இல்லை என முதல்வர் கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பற்றி உங்கள் பார்வை என்ன?
40 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே அந்தக் கட்சிக்கு வரவேற்பு இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதன் தேர்தல் தாக்கம் எங்களின் கவலையாக உள்ளது.
விஜய்யின் கட்சியுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
தவெக எங்களை பகிரங்கமாக அழைத்துள்ளது. அதாவது எங்களது கள பலத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று அர்த்தம். தற்போது நாங்கள் திமுக தலைமையுடன் தான் பேசி வருகிறோம். அரசியலில் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இயல்பு தான்.
பேச்சுவார்த்தை தாமதமாவதில் காங்கிரஸிற்கு அதிருப்தியா?
அரசியலில் அதிருப்தி அடைய இடமில்லை. ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தை முடிந்தால் தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 75 நாட்களாவது அவகாசம் கிடைக்கும். கடைசி நேரத்தில் எங்களை ஒரு நிலைக்குத் தள்ளக் கூடாது என்பதே எங்கள் கவலை.
திமுக-விற்கு காங்கிரஸால் என்ன லாபம்?
தமிழகத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கி 12% முதல் 20% வரை உள்ளது. 22,000 கிராமக் கமிட்டிகள் எங்களிடம் உள்ளன. ராகுல் காந்திக்குத் தமிழகத்தில் பெரும் ஆதரவு உள்ளது. காமராஜரின் ஆட்சி இன்னும் மக்களால் பேசப்படுகிறது.
காங்கிரஸ் எப்போது தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும்?
காங்கிரஸிற்கான நல்ல காலம் விரைவில் வரும். 58 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாமலே எங்களது தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். 234 தொகுதிகளுக்கும் சேர்த்து எங்களிடம் 5,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளன. இதுவே எங்கள் பலத்திற்குச் சாட்சி.












Click it and Unblock the Notifications