தரமான சாலை வேண்டுமெனில் பணம் கட்டுங்க..மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுக்கு வேல்முருகன் கண்டனம்
சென்னை: தரமான சாலை வேண்டும் எனில் மக்கள் பணம் செலுதித்தான் ஆக வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ.வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து வருகிறது. நகர்ப்புறங்களில் விதிமுறையை மீறி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதோடு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், மக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

டோல்கேட்டுகளை அகற்ற வேண்டும்
இதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோன்று, விதிகளை மீறி அமைக்கப்பட்ட சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் வசூல் காலம் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

நிதின் கட்காரிக்கு கண்டனம்
இந்த நிலையில், தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், தரமான சாலைகள் தேவை என்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும் என்று நிதின் கட்காரி பேச்சு, மத்திய பாஜக அரசின் மோசமான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

கட்டணங்களை குறைக்க வேண்டும்
எனவே, கொரோனா தொற்று, தொழில் வணிகத் துறையினர் நிதி நெருக்கடி மற்றும் மோசமான வணிகத்தில் இருந்து மீண்டு வர உதவும் வகையில், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications