அடுத்தவர் மனைவியை நோக்காதவன்.. அடுக்குமொழியில் அளக்காதவன்- மாஜி நாம் தமிழர் கூட்டத்தில் வேல்முருகன்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உருவாக்கியிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் வெற்றிக்குமரன், புகழேந்தி, இளவஞ்சி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று, சீமான் பெயரைக் குறிப்பிடாமல் மிக கடுமையாக விமர்சித்தார்.
திருச்சி தமிழர் ஒருங்கிணைப்பு இயக்க மாவீரர் நாள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: தமிழீழ விடுதலைக்காக இன்னுயிரை விதையாக்கிய மாவீரர்கள் வரலாற்றை மட்டும் இந்த மேடையில் பதிவு செய்வோம்; அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் நாம் தமிழர்கள்.. உணர்ச்சிவயப்பட்டவர்கள். எனக்கும் ஆதங்கங்களை மொத்தமாக கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

வாய்ச்சொல் வீரன் அல்ல: வெறும் வாய்ச்சொல் வீரனாக இல்லாமல், கதை வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசத் தெரியாமல், மிகச் சரியான ஒரு நடிகனாக இல்லாமல், லட்சக்கணக்கில் ரசிகர்களை தன்னகத்தில் வைத்துக் கொண்ட ஒருவனாக இல்லாமல் இருக்கிறேன்.
வேல்முருகனின் முந்திரிக்காடு: பிரபாகரனின் வன்னிக்காடு- உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் வீரப்பனின் சந்தனக்காடும் தனக்கான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வேல்முருகன் வாழுகிற 'முந்திரிக் காடும்' வரலாறுகளைப் படைக்கின்ற வரலாற்றை படைக்கிற இடத்தில் இருக்கிறது. என் பள்ளிப் பருவத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உண்டு, உறவாடி, கரம்பிடித்து வளர்ந்தவன் இந்த வேல்முருகன்.
அடுக்கு மொழியில் அள்ளிவிட தெரியாது: ஆனால் எனக்கு மேடையிலே பாடத் தெரியாது.. வசனம் பேசத் தெரியாது.. அடுக்கு மொழியில் அள்ளிவிடத் தெரியாது.. அதனால் என் உலகத் தமிழருக்கு என்னைத் தெரியாது..ஏன் உள்ளூர் தமிழனுக்கும் கூட என்னைத் தெரியாது. 1983-ல் இலங்கை இனக் கலவரத்தில் இருந்து... அரைக்கால் டிராயருடன் மாணவர்களைத் திரட்டி ஈழத் தமிழருக்கு வீதிகளில் நீதி கேட்டு போராடியவர்களில் ஒருவனாக என்னுடைய அரசியல் பயணம் தொடங்கியது. 40 ஆண்டுகளைக் கடந்த அரசியல் வாழ்க்கையில் 3 முறை ஓட்டு அரசியலில் வென்றிருக்கீறேன். என் பதவியை விட என் உயிரை மகத்தானது என் தலைவர் பிரபாகரன். அவருக்காக எதனையும் செய்ய தயாராக இருப்பவன் இந்த வேல்முருகன். அன்று பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டபோது ஒற்றை ஆளாக சட்டசபையில் நின்று ரணகளமாக சண்டையிட்டவன் இந்த வேல்முருகன். ஆனால் இதை எடுத்துச் சொல்ல எனக்கு வலிமையான குரல் இல்லை; வாய்ப்புகள் இல்லை.
கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம்: எனக்கு என சொத்து, குடும்பம், மனைவி, குழந்தைகள் என எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் இந்த மண்ணுக்கும் மக்கள் விடுதலைக்கும் இழக்கிறவன். ஆனால் இங்கே போராளிகளை ஊடகங்களில் காட்டுவதற்கு பதிலாக போலிகளைக் காட்டினார்கள்; போராளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாக சினிமா கூத்தாடிகளுக்கு ஊடகங்கள் அங்கீகாரம் கொடுத்தன. இதனால் நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகிற தலைவர்கள், போராளிகள், தமிழ்நாடு விடுதலைப் படை- தமிழ்நாடு மீட்சிப் படை ஆளுமைகள் மறைக்கப்பட்டனர். இந்த போராளிகளுக்கு காப்பரணாக நின்றது இந்த வேல்முருகன்தான்.
பிறன்மனை நோக்காதவன்: விடுதலைப் புலிகளின் தியாக வாழ்வை உள்வாங்கி 'தனி மனித' ஒழுக்கம் உள்ளவனாக... பீடி, சிகரெட், காபி, டீ, கூல்டிரிங்ஸ் எதுவும் இல்லாதவனாக .. குறிப்பாக இங்கே சொன்னார்கள் அல்லவா, பிறன்மனை நோக்கான்- நான் தொட்டு தாலி கட்டிய மனைவியைத் தவிர வேறு எவரிடத்தையும் ஏறெடுத்து கூடப் பார்க்காத தனிமனித ஒழுக்கம் உள்ளவனாக, எந்த ஒரு கார்ப்பரேட் பெரும் நிறுவனங்களிடம் இருந்தும் பணம் பெறாதவனாக, சட்டத்துக்குப் புறம்பாக சம்பாதிக்கிற எந்த கொள்ளையனிடமும் படியேறாதவனான இருக்கிறேன் இந்த வேல்முருகன்.
பகிரங்கமாக பேச முடியாது: நாம் தமிழர் கட்சியினரை ஒருபோதும் விமர்சிக்கக் கூடாது என 15 ஆண்டுகளாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் கடுமையாக கூறியிருந்தேன். அப்படி விமர்சித்தவர்களை கடுமையாகவும் கண்டித்துள்ளேன். உங்களைப் போல நான் பகிரங்கமாகவும் பேச முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரையே சட்டசபையில் தைரியமாக எதிர்கொண்டு களமாடியவன்.
சினிமா நாயகன்கள் தலைமை ஏற்பதா?: இந்த நாட்டில் சினிமா கதையின் நாயகன்களை, சதை நாயகிகளை கட்டிப் பிடித்து முத்தமிட்டு கட்டிலறைக் காட்சிகளில் நடித்தவர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு தலைமை ஏற்கவா! என அழைக்கிற கேடு கெட்டப் புத்தியில் இருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனக்கு தேர்தல் நிதியை கொடுக்க திமுக தலைமை முன்வந்த போது என்னையும் டாக்டர் ராமதாஸ் பட்டியலில் சேர்த்துவிடாதீர்கள் என்று சொன்னவன் இந்த வேல்முருகன். ஒருவனை தலைவனாக ஏற்கும் முன்னர் தமிழ்ச் சமூகம் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications