முத்துராமலிங்க தேவரை பெருமைப்படுத்திய விஜய்.. குருபூஜை நாளில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் புகழாரம் சூட்டி அவரை வணங்கி வாழ்த்தி போற்றுவோம் என்று கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவரது 117வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை இன்று நடைபெற்று வருகிறது
இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை தினமான இன்று அவரை வணங்கி வாழ்த்தி போற்றுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுபற்றி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் இந்திய விடுதலைக்காக காத்திரமாக களமாடியவர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்த துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக்கலை பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலில் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்'' என்று கூறியுள்ளார்.
முத்து ராமலிங்க தேவர் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்து போராடியவர். குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பினார். அரசியலிலும் ஜொலித்தார். 1939-ஆம்ஆண்டு ஜூன் 22, அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூடன் இணைந்து செயல்பட்டார். 1952ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக் கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் அவரை வாழ்த்தி வணங்குவோம் என தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications