திமுகவின் "ஸாரிம்மா" மாடல் சர்க்கார்.. முதல்வர் பதவி எதற்கு? கொந்தளித்த தவெக தலைவர் விஜய்!
சென்னை: வெற்று விளம்பர மாடல் திமுக சர்க்கார், இப்போது சாரி'மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது என்று தவெக தலைவர் விஜய் சாடியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வழக்கு முதல் அஜித் குமார் வழக்கு வரை அத்தனை விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமென்றால், உங்கள் ஆட்சியும், உங்கள் பதவியும் ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னையில் தவெக சார்பாக விஜய் தலைமையில் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சிவானந்தா சாலையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர். தவெக தொடங்கி முதல்முறையாக விஜய் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் பேச்சு
கருப்பு டீ சர்ட் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விஜய், லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தவெக மேடையில் ஏற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், உங்களின் ஆட்சி காலத்தில் மொத்தமாக 24 பேர் போலீஸ் விசாரணையின் போது இறந்திருக்கிறார்கள். 24 குடும்பங்களிடமும் சாரி சொன்னீர்களா? தயவு செய்து சாரி சொல்லிவிடுங்கள்.
அவமானம்
அஜித் குமார் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தை போல், மற்ற குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுத்தீர்களா? தயவு செய்து நிவாரணம் கொடுத்துவிடுங்கள். சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ மாற்றிய போது, அவமானம் என்று சொன்னீர்கள். இன்று அஜித் குமார் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்ததற்கு பெயர் என்னங்க சார்? அதே அவமானம்தானே..
நீதிமன்றத் தலையீடு
ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாக சிபிஐ உள்ளது. ஏன் அங்கு சென்று ஒழிந்து கொண்டு இருக்கிறீர்கள். திமுக ஆட்சியில் இன்னும் எவ்வளவு அட்ராசிட்டி நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கு முதல் அஜித் குமார் வழக்கு வரை அத்தனை விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டுமென்றால், பின் நீங்கள் எதற்கு?
சிஎம் பதவி எதற்கு?
உங்க ஆட்சி எதுக்குங்க சார்? நீங்கள் அமர்ந்திருக்கும் சிஎம் பதவி எதுக்கு சார்? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து எந்த பதவியும் வரப் போவதில்லை. ஏனென்றால் பதில் இருந்தால் தானே வரும். அதிகபட்சமாக உங்களிடம் இருந்து வரக் கூடிய பதில் சாரி'மா.. தெரியாம நடந்துருச்சுமா.. இல்லனா நடக்கக் கூடாதது நடந்துவிட்டதுமா..
சாரி'மா மாடல் அரசு
வெற்று விளம்பர மாடல் திமுக சர்க்கார், இப்போது சாரி'மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது. இப்படி இருக்கும் திமுக அரசு, ஆட்சியில் இருந்து செல்வதற்கு முன் சட்டம் ஒழுங்கை சரி செய்து ஆக வேண்டும். இல்லையென்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக இருந்து செய்ய வைப்போம். தவெக சார்பாக அத்தனை போராட்டங்களும் எடுத்து நடப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications