தவெக பக்கம் ரூட் எடுக்கும் காங்கிரஸ்.. விஜய்யுடன் நடந்த சந்திப்பு.. பேக் அப் பிளானில் திமுக?
சென்னை: விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி தரப்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருப்பதாகவும், நவம்பர் கடைசி வாரத்தில் ராகுல் காந்தியை தவெக நிர்வாகிகள் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தவெக தொடங்கப்பட்டதில் இருந்தே விஜய் கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாக உள்ளது. அதற்கேற்ப கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி நேரடியாகவே விஜய்யுடன் பேசி ஆறுதல் கூறி இருந்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

2011ல் சுமார் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருக்கிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால், காங்கிரஸில் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
இதற்கான சில பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிக இடங்களை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தவெக தலைவர் விஜய் மற்றும் இன்னும் சில நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்பின் நவம்பர் கடைசி வாரத்தில் தவெக நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் இந்த முயற்சிகளை அறிவாலயமும் தெரிந்தே வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையிலான நட்பு காரணமாக, காங்கிரஸ் கட்சி கூட்டணியைவிட்டு வெளியேற வாய்ப்புகள் குறைவு என்றே கணித்துள்ளது.
ஏனென்றால் முதல்வர் ஸ்டாலினை இந்தியா கூட்டணியில் இருந்து விலக்குவது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கொடுத்துள்ளது. இதனால் பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக விவகாரத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று ராகுல் காந்தி கூறியதாக கூறப்படுகிறது.
அதேபோல் திமுகவும் மாற்று திட்டங்களை தயார் செய்து வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்த மக்கள் நீதி மய்யம், கருணாஸ், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரை சேர்க்கவும், அதிக தொகுதிகளை விரும்பும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூடுதல் இடங்களை கொடுக்கலாம் என்று திமுக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீகார் தேர்தல் முடிவுக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய புயல் வீசலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications