விஜய்யை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி.. மயிலாடுதுறை எம்எல்ஏ-வாக முயற்சிக்கிறார்! தராசு ஷ்யாம் கருத்து
சென்னை: தவெக தலைவர் விஜய்யை ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் தொடர்பாக பேசியதாகவும் கூறியுள்ளார். அதற்கு மேல் வேறு எந்த விஷயங்களையும் பகிர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த குழு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி தரப்பில் 75 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை பெற்றுக் கொண்ட ஸ்டாலின், திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்ட பின் ஆலோசிக்கலாம் என்று பதில் அளித்தார். காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
இம்முறை 2011 சட்டசபைத் தேர்தலை போல் 63 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வேண்டும் என்று தயாராகி வருகிறது. இதற்காக திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இப்படியான சூழலில் பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், கூட்டணியில் இருந்து விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், பிரவீன் சக்ரவர்த்தி ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். அவர் ஒரு வியூகவாதி தான். அவரது நோக்கம் மயிலாடுதுறை தொகுதிதான். அந்த தொகுதியில் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். அதனால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான் இது. ஆனால் ராகுல் காந்தி இதற்கு இணங்குவாரா என்ற சந்தேகம் உள்ளது.
ஏனென்றால் நாடாளுமன்றத்தில் பல பிரச்சனைகள் உள்ளது. அதனால் திமுகவின் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு அவசியம். பெரியளவில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன். இதன் மூலம் அதிக தொகுதிகளை திமுகவிடம் பெற முயற்சிக்கலாம். அப்படியென்றால் மயிலாடுதுறை தொகுதி தமக்கு ஒதுக்கப்படலாம் என்று நினைக்கலாம். பேர வலிமை கூட்டுவதற்கு தான் இதனை பார்க்கிறேன்.
இந்த சந்திப்பு ராகுல் காந்தி அறிவுறுத்தல் பெயரில் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இதுதொடர்பான ஒரு ரிப்போர்ட் ராகுல் காந்தி வசம் செல்லும். அதனை வைத்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு வட இந்திய அரசியல் அழுத்தம் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சி சில விரும்பும் தொகுதிகளை பெற, புற அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications