சொல்லி வச்சது போல்.. ஒரே மாதிரி சொல்லும் தவெகவினர்! சாதி பார்த்தே கட்சியில் பதவி? பரபர பாலிடிக்ஸ்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என பலர் குற்றம் சாட்டிய வருகின்றனர். குறிப்பாக சொல்லி வைத்தார் போல அனைவருமே தமிழக வெற்றி கழகத்தில் சாதி பார்த்தே பதவி வழங்குவதாக அடுத்தடுத்து புலம்பி வருவது கட்சியின் தலைவரான விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதமே அறிவித்த நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என பிசியாக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

4 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தனியே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
தற்போது கட்சியின் அடிப்படையான மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மூன்று கட்டங்களாக 56 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நியமன அறிவிப்பை விஜய் வெளியிட்டார். நேற்று முன் தினம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான்காம் கட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
தொடர்ந்து 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் விஜய் மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டதும், பதவி கிடைக்காதவர்கள் தலைமை குறித்து வெளியில் இருந்து நிர்வாகிகள் பேட்டி கொடுப்பது அல்லது வீடியோ மூலம் பேட்டி கொடுப்பது வழக்கம் ஆகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை, சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக தேனி மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில்," விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது தனக்கு பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது கட்சியில் பொறுப்பு வழங்கக் கூடாது என மாவட்ட செயலாளர் கூறுகிறார். இரண்டு மாவட்ட செயலாளர்களும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தனது உறவினர் பெண் மூலம் பொதுச் செயலாளர் ஆனந்த் இடம் தன்னை பற்றி அவதூறாக கூறி பதவி வழங்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிவதில்லை. உறவினர்களுக்கும் ஒரே சாதிக்காரர்களுக்கும் தான் அங்கீகாரம் கிடைக்கிறது. உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. ஜாதி சார்ந்த உறவினர்களை மட்டுமே அங்கீகரிக்கின்றனர் என பேசியிருந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் சாதி அடிப்படையில் பொறுப்பு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். இப்படியாக பதவி கிடைக்காத அனைவருமே வேறுவேறு காரணங்களை சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் சாதி பார்ப்பதால் தான் பதவி அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. சமூக நீதியை அடிப்படைக் கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு கட்சியில் சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications